இந்தியாவின் நிதியுதவியில் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டம் ஆரம்பம்!

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம் இந்தியாவின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

45.27 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த திட்டம் அடுத்த மாதமளவில் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் போக்குவரத்து மற்றும் சரக்குகளைக் கையாளக் கூடிய துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் வகையில் காங்கேசன்துறை துறைமுகத்தினது அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இத்திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சாகல ரத்நாயக்க குறித்த அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் பெருமளவான வேலைவாய்ப்புக்கள் அதிகரிப்பதுடன், அப்பிரதேசம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் இத்திட்டத்தில் அனைத்துக் கப்பல்களும் வரக் கூடிய வகையில், துறைமுகப்பகுதி 9 மீற்றர் வரை ஆழமாக்கப்படவுள்ளதுடன், தற்போதுள்ள அலைதாங்கி முற்றிலுமாக மாற்றியமைக்கப்படவுள்ளது.

அத்துடன், தற்போது காணப்படும் இறங்குதுறை புனரமைக்கப்படுவதுடன், மேலும் ஒரு புதிய இறங்குதுறையும் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சாகல மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor