இந்தியத் துணைத் தூதருடன் மாவை எம்.பி. அவசர சந்திப்பு

mavai mp inகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா, இந்தியத் துணைத் தூதுவர் வி.மாகாலிங்கத்தை நேற்று யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசினார்.

வடமாகாணசபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அவர் நேற்று மதியம் தீடீரென இந்தியத் துணைத் தூதுவரைச் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் தகவல் வெளியிடவில்லை.

இந்தச் சந்திப்புக் குறித்து துணைத் தூதுவர் வி.மகாலிங்கத்திடம் கேட்டபோது, இது வழமையான சந்திப்பு என்று மட்டும் பதிலளித்தார்.

வடமாகாண சபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளராக மாவை.சேனாதிராசா நிறுத்தப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்று முன்னர் செய்திகள் வெளியான பின்னணியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.