இணையத்தின் ஊடான தமிழ் மொழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி பட்டக்கற்கைநெறி

யாழ் பல்கலைக்கழகத்தின் இணையத்தின் ஊடான தமிழ் மொழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி பட்டக்கற்கை நெறி புதிய பிரிவுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது இதற்கான விண்ணப்ப முடிவுத்திகதி 15.09.2014 ஆகும்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள்  வணிக பீடமானது முகாமைத்துவமாணிக்  கற்கை நெறியை  Bachelor of Business Management (BBM)  நடாத்துகின்றது.

இக்கற்கை நெறியானது உயர்கல்வி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் தொலைக்கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு தேசிய இணையவழித் தொலைக்கல்வி சேவையின் (NODES) அனுசரனையுடன் நடாத்தப்படுகின்றது.

இக்கற்கை நெறியானது  உலகின் எப்பகுதியிலிருந்தும் கல்வியைக் கற்கும் வாய்ப்பு,வேலையிலிருந்து கொண்டே விரும்பிய நேரத்தில் கற்கைநெறியைத் தொடரும் வாய்ப்பு, க.பொ.த உயர்தரத்தில் கலை/ விஞ்ஞானம்/ கணிதம்/ வணிகம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவரும் கல்வியைத் தொடரக்கூடிய வாய்ப்பு,மூன்று வருடத்தில் முகாமைத்துவமாணிப் பட்டத்தினைப் பெறும் வாய்ப்பு  என்பவற்றை அளிக்கின்றது.

அனுமதிக்கான தகைமைகளாக.பொ.த உயர்தரத்தில் பல்கலைக்கழக அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமை ( 3 பாடங்களில் சித்தி) அல்லது பல்கலைக்கழக மூதவையினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதற்கு சமனான தகமை கொள்ளப்படுகிறது.நிபந்தனைகளின் அடிப்படையில் 1வருடத்திற்கான விலக்ககளித்தலும் வழங்கப்படுகிறது

விண்ணப்பதாரிகள் நேர்முகப்பரீட்சை மூலமும் தேவையேற்படின் எழுத்துப்பரீட்சை மூலமும் தெரிவு செய்யப்படுவர்.கற்கை நெறிக்கான கட்டணம் மூன்று வருடங்களுக்கும் ரூபா 150,000 ஆகும்.இதில் 60% மான தொகை முதல் வருடத்தில் பதிவு செய்யப்படும் போது செலுத்தப்படல் வேண்டும்.ஒரே தடவையில் செலுத்தமுடியாதவர்கள் இதனை இரு தவணைக்கட்டணங்களில் செலுத்த முடியும்.

விண்ணப்பங்கள் யாவும் 1000 பதிவுக்கட்டணம் செலுத்தி  பதிவாளர், வெளிவாரிப்பரீட்சைகள், பதிவுகள் அலகு, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம், திருநெல்வேலி யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அல்லது BBM Online அலுவலகத்திலே நேரடியாகவோ தபால்மூலமோ சேர்ப்பிக்கப்பட வேண்டும். தபாலுறையின் இடதுபக்க மேல்மூலையில் இணையவழி வியாபார முகாமைத்துவமாணி பட்டப்படிப்பு என தெளிவாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.

மேலதிக விபரங்களை யாழ்ப்பாணப்பல்கலைக்கழக www.jfn.ac.lk/bbm  இணையத்தள முகவரியில் பார்வையிடலாம். தொலைபேசித்தொடர்புகளுக்கு 021 222 1106 என்ற இலக்கத்தினை பயன்படுத்தலாம்