இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேச்சு நடத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள், இனப்பிரச்சனைக்கு வடக்கு-கிழக்கு இணைந்த பிரதேசத்தில் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வு காண்பதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கோரியிருக்கின்றனர்.
அடுத்த வாரம் இலங்கை வரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி-யின் விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட விடயங்களைக் கவனிப்பதற்காக சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இலங்கை ஜனாதிபதி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரச உயர் மட்டத்தினரைச் சந்தித்துப் பேசிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியிருக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
புதிய அரசாங்கம் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ள போதிலும் அதற்குரிய நடவடிக்கைகளை இன்னும் எடுக்கவில்லை என்று கூட்டமைப்பினர் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
மீனவர்களின் பிரச்சனையைத் தொடர்தவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அதற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியதன் அவசியம் பற்றியும் இந்தச் சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல்போனவர்கள் விவகாரம் என்பன குறித்தும் இந்தச் சந்திப்பின்போது இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசத்தில் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்து உதவ வேண்டும் என்றும் கோரியிருப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் நடத்திய பேச்சுக்களின் போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பது பற்றி விவாதிக்கப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும், இலங்கை வருகின்ற இந்தியப் பிரதமர் இலங்கை அரசாங்கத்துடன் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பணியாற்றிய போது உயிரிழந்த இந்திய அமைதி காக்கும் படையினருக்கான நினைவிடத்திற்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.