இடியுடன் கூடிய கனமழை வடக்கு, கிழக்கில் தொடரும்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை சில தினங்களுக்கு தொடரும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இதன் போது கடல் கொந்தளிப்பாக காணப்படும்.

எனவே மீனவர்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்று வானிலை அவதான நிலையத்தின் கடமைநேர அதிகாரி லக்ஷ்மி லத்தீப் அறிவித்துள்ளார்.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை இன்னும் சில தினங்களுக்குத் தொடர்ந்துபெய்யக்கூடும்.

அதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பிற்பகலிலோ அல்லது இரவிலோ இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது மணிக்கு 20 கிலோ மீற்றர் தொடக்கம் 30 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

எனவே கடலில் கொந்தளிப்பு நிலை தோன்றக்கூடும் என்பதால் மீனவர்கள் அவதானமாகச் செயற்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் காலை 8.30 மணி தொடக்கம் நேற்று காலை 8.30 மணி வரை 18.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இடி, மின்னல் குறித்து அனைவரும் அவதானமாக இருப்பதன் மூலம் அவற்றின் பாதிப்புக்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.