ஆஸ்திரேலிய யுரேனியத்தைப் பெற இந்தியா ஒப்பந்தம்

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான அணு ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தானது. இனி ஆஸ்திரேலியாவில் இருந்து அணு எரிபொருளான யுரேனியத்தை இந்தியா இறக்குமதி செய்ய முடியும்.

modi_abbot_sign_nuclear

ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட்டின் இந்தியப் பயணத்தின் மிக முக்கிய கட்டமாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து தருவிக்கப்படும் யுரேனியத்தை இந்தியா ராணுவம் சாராத தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதேநேரம் இறக்குமதி செய்யப்படும் யுரேனியம் சர்வதேச கண்காணிப்புக்குள் இருக்கும். இந்தியாவில் மிகக் குறைந்த அளவே யுரேனியம் உள்ளது. யுரேனியக் கையிருப்பில் உலகின் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.

இருந்தும் இந்த ஒப்பந்தத்தால் உடனடியாக பெரிய பலன் ஏற்படாது என இந்திரா காந்தி அணு ஆய்வு மையத்தில் பணியாற்றி ஒய்வுபெற்ற மூத்த விஞ்ஞானி கிருஷ்ணன் தெரிவித்தார்.

கசக்ஸ்தான், ரஷ்யா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிடமிருந்து இந்தியா கணிசமான அளவுக்கு யுரேனியத்தை இறக்குமதி செய்துவருவதாக குறிப்பிட்ட அவர், ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் ஒத்துழைப்புடன் அமைக்கப்படவுள்ள அணு உலைகளுக்குத் தேவைப்படும் அணு எரிபொருட்களை அந்நாடுகளே வழங்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான அணு உலைகள் இயற்கையாக கிடைக்கும் யுரேனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துவதில்லை.