அவுஸ்திரேலியாவில், தீக்குளித்த இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கடந்த 2012 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
அங்கு அவரது புகழிடக் கோரிக்கை இரண்டு முறை நிராகரிக்கப்பட்டதாலேயே அவர் விரக்தியடைந்து இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
சிட்னியின் புறநகர்ப் பகுதியில் புதன்கிழமை இரவு அவர் இந்தத் தீக்குளிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, தற்போது மருத்துவமனை ஒன்றில் உயிருக்காக போராடி வருவதாக அவுஸ்திரேலியத் தமிழ் காங்கிரஸ் அமைப்பின் அகதிகள் நலன்களுக்கான ஒருங்கிணைப்பாளர் பால விக்னேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
அந்த இளைஞர் 65 சதவீதத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார் என்றும் அவர் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியா வந்தடையும் இவரைப் போன்றவர்கள் இப்படியான நடவடிக்கையில் ஈடுபடமால் இருக்க வேண்டும் என்பதே தமது அமைப்பின் கருத்து எனவும் பால விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
பிரச்சினைகளை சட்டரீதியாக மட்டுமே சந்தித்து தீர்வைக் காண வேண்டும் எனவும் கூறும் அவர், பாதிப்புக்குள்ளான இளைஞர் யாரென்பது தெரியுமானாலும் பாதுகாப்பு மற்றும் சமூகக் காரணங்களுக்காக அவரது பெயரை தமது அமைப்பு இப்போது வெளியிடவில்லை எனவும் கூறினார்.
முதல் முறையாக அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் செய்திருந்த மேல்முறையீடும் நிராகரிப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.