ஆஸி. அமைச்சரின் யாழ். விஜயம்; கூட்டமைப்பு அதிருப்தி

யாழ்ப்பாணம் வந்திருந்த ஆஸ்திரேலியாவின் குடிவரவு, குடியகல்வுக்கான அமைச்சர் ஸ்கொட் மொறிசன் அங்கு ஆளுநரை மட்டும் சந்தித்துப் பேசியுள்ளார்.இது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

suresh

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுவதற்காக இளைஞர் யுவதிகள் சட்டவிரோத படகு பயணம் மேற்கொள்வதைத் தடுத்து நிறுத்த விழையும், அந்நாட்டின் முக்கிய அமைச்சர் அந்த மக்களின் நிலைமைகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்காமல் சென்றிருப்பது ஏற்புடையதல்ல என்று கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

யுத்தம் முடிவடைந்த பின்பும், நாட்டில் மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அதற்கு மாறாக, இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக ஆஸிப் பிரதமர் கருத்து வெளியிட்டிருப்பதை கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் அதிருப்தியுடன் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் வட பகுதியில் உள்ள உண்மை நிலவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஆஸ்திரேலிய அமைச்சர், தேர்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினரை சந்தித்திருக்க வேண்டும், அவர் அப்படி செய்யாதது தவறான சமிஞ்கையை வெளிக்காட்டும் எனவும் அவர் கூறுகிறார்.

சட்டவிரோத படகு பயணங்கள் இடம்பெறாத வகையில் கடலில் வேவு பார்ப்பதற்கு கப்பல்களை வழங்கியுள்ள ஆஸ்திரேலியா, அத்தகைய பயணங்களை இளைஞர் யுவதிகள் மேற்கொள்ளாத வகையில் இங்கு நிலைமைகளில் முன்னேற்றத்தை எற்படுத்துவதற்கு உதவ முன்வர வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி

வடக்கின் அபிவிருத்தி மற்றும் கரையோர பாதுகாப்பு குறித்து அவுஸ்திரேலிய குழு ஆராய்வு

Recommended For You

About the Author: Editor