ஆனையிறவில் விபத்து; இராணுவ சிப்பாய் பலி; 7பேர் காயம்

aanaiyiravu_accident_001ஆனையிறவில் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இராணுவச்சிப்பாய் பலியானதுடன் ஏழுவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு 9.40 மணியளவிலேயே இடம்பெற்றுள்ளது.

யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச்சபைக்கு சொந்தமான பேரூந்து உழவு இயந்திரத்துடன் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று இராணுவத்தினர் பயணித்த உழவு இயந்திரத்தை ஆனையிறவு பகுதியில் வைத்து முந்திச் செல்ல முற்றபட்டபோது அந்த பேரூந்து உழவு இயந்திரத்திற்கு பின்புறமாக மோதியுள்ளது.

தனியார் பேரூந்து மோதியதால் வேக கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துகொண்டிருந்த இலங்கை போக்குவர்த்து சபைக்கு சொந்தமான பேரூந்துடன் மோதியுள்ளது.

இதனால்,இலங்கை போக்குவர்த்து சபைக்கு சொந்தமான பேரூந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த இராணுவீரர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதுடன் கொழும்பு நோக்கி பயணித்த அரச பேரூந்தில் பயணித்தவர்களில் ஏழுபேர் படுகாயம் அடைந்து நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.