ஆதரவாளர்களை உடைக்க சதி – அனந்தி

ananthy-sasikaran-tnaஎனது தனிப்பட்ட ஆதரவாளர்களின் ஆதரவினை உடைக்கும் சதி முயற்சிகள் இடம்பெற்று வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

அனந்தியின் ஆதரவாளர்கள் இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் இன்று திங்கட்கிழமை (14) கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கூறிய அவர், ‘பண்ணாகத்திலுள்ள எனது அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அநாமதேய துண்டுப்பிரசுரம் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து எனது ஆதரவாளர்கள் இருவரை எனது அலுவலகத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடக் கூறியிருந்தேன்.

மேற்படி இரண்டு ஆதரவாளர்களுக்கும் சிவில் உடையில் நின்றிருந்த பொலிஸாரிற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடே, அவர்கள் கைது செய்யப்பட்டமைக்குக் காரணமாகும்.

எனக்குரிய பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்பட்ட பின்னர், எனது வீட்டிற்கு அருகில் வாகனங்களின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன், எனது வீட்டுக்கு அயலில் உள்ளவர்களிடமும் அனந்தி எங்கே சென்றார்?, எப்போது சென்றார்?, எப்போது வருவார்? போன்ற கேள்விகளை இனந்தெரியாதோர் சிலர் கேட்டுள்ளனர்.

இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினைப் பதிவு செய்திருந்தேன். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அயல் வீடுகளுக்கு வந்துள்ள வட்டுக்கோட்டைப் பொலிஸார், அனந்தி தொடர்பாக எவரும் விசாரிக்கவும் இல்லை, அச்சுறுத்தவும் இல்லையென கையெழுத்திடுமாறு கேட்டதாக அறிகின்றேன்.

பொலிஸாரின் இந்தச் செயற்பாடானது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. நான் மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் கையெழுத்து கேட்டுச் செல்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

அனந்தியின் ஆதரவாளர்கள் கைதாகி விடுதலை