ஆணைக்குழு முன் சாட்சியமளித்தோரின் விவரங்களைக் கோருகிறது இராணுவம்

Sri_Lanka_Army_Logoயாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகச் சாட்சியமளித்தவர்களின் விவரங்களை கிராம சேவையாளர்களிடம் இராணுவத்தினர் கோரியிருப்பதாகத் தெரிய வருகின்றது.

அதிலும் இராணுவத்தினருக்கு எதிராகச் சாட்சியமளித்தவர்களின் விவரங்களை அவர்கள் கேட்டிருப்பதாக அறியமுடிகின்றது.

காணமற்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக் குழுவின் அமர்வுகள் கடந்த 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இதில் 175 பொதுமக்கள் சாட்சி யமளித்திருந்தனர்.

சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 13 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் சாட்சியமளித்திருந்தனர். இவ்வாறு சாட்சியமளித்த மக்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தினருக்கு எதிராகவே தமது சாட்சியத்தை முன்வைத்திருந்தனர்.

இவ்வாறானதொரு நிலையில் ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர்களின் விவரங்களைத் தம்புதோட்ட இராணுவ முகாம் அதிகாரிகள் கிராம சேவையாளர்களிடம் கோரியுள்ளனர்.

இருப்பினும் கிராம சேவையாளர்கள் குறித்த விவரங்கள் தம்மிடம் இல்லையயன்று தெரிவித்தாகக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து இராணுவத்தினர் பிரதேச செயலகத்திடம் குறித்த விவரங்களைக் கோரியுள்ளதாக அறியமுடிகின்றது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அனுமதியின்றிச் சாட்சியமளித்தவர்களின் விவரங்களை யாருக்கும் வழங்க வேண்டாம் என்று ஆணைக் குழுவின் செயலாளர் குணதாஸ அறிவுறுத்தியுள்ளார்.