வடமாகாணத்துக்கான சேவைகளை வழங்கவென ஆட்பதிவு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஒன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் திறந்துவைக்கப்படவுள்ளது.நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இந்த காரியாலயம் திறந்துவைக்கப்படவுள்ளது.
மக்கள் இலகுவாக தமது சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் வவுனியா மாவட்டச் செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின்மூலம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி சேவையை வழங்கவுள்ளது.
இதற்கான நிதியுதவி ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திடத்தின் கீழ் உள்ள “நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டம்” ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ் வேலைத்திட்த்தின் கீழான இரண்டாவது மாகாணக் காரியாலயம் கிழக்கு மாகாணம் முழுவதையும் உள்ளடக்கி மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் மே மாதமளவில் அது மக்களுக்கு சேவையை வழங்கவுள்ளது.
மாகாணக் காரியாலயத்தினூடாக,
- வட மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலகங்களினாலும் பெற்றுக்கொள்ளப்படும் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் மாகாணக் காரியாலயத்தினால் பொறுப்பேற்கப்பட்டு அனுமதியளிக்கப்பட்டு தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி வைத்தல்.
- வட மாகாண பாடசாலை விண்ணப்பதாரிகளுடைய விண்ணப்பங்கள் மாகாண காரியாலயத்தில் பொறுப்பேற்கப்பட்டு அடையாள அட்டைகளை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.
- பொதுமக்களுக்கு அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான விண்ணப்பங்கள், அறிவுறுத்தல்கள் மற்றும் தகவல்களை வழங்குவதுடன் இச் செயற்பாட்டில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வினை விரைவாக பெற்றுக்கொடுத்தல்.
- இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள ஆட்களை பதிவுசெய்யும் திணைக்களத்தின் நிலையங்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தலும் நிர்வகித்தலும்.
ஆகிய பணிகளைச் செய்யும் எனவும் ஆட்பதிவுத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.