ஆசிரிய கல்வியியலாளர் சேவை தரம் III இற்கு விண்ணப்பம் கோரல்

கல்வி அமைச்சின் கீழுள்ள இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவையில் III ஆம் வகுப்புக்குச் சேர்ப்பதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இலங்கை தேசியக் கல்வியியற் கல்லூரி, ஆசிரியர் மத்திய நிலையம் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் காணப்படும் சுமார் 272 கல்வியியலாளர்களை நியமிப்பதற்கே கல்வி அமைச்சின் செயலாளரால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இரண்டாம் மொழி தமிழ், சித்திரம், சங்கீதம், உயிரியல், இரசாயனவியல், முதல்மொழி தமிழ், ஆங்கிலம், ஆரம்பக்கல்வி, கணிதம், சமூகக்கல்வி, இந்து சமயம், விவசாயம், கிறிஸ்தவ சமயம், விசேட கல்வி நாடகம் மற்றும் வர்த்தக கற்கை, நடனம், புவியியல், குடியுரிமைக் கல்வி மற்றும் உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கு தமிழ்மொழி மூலமான கல்வியியலாளர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி, ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி, மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரி, தர்காநகர் கல்வியியற் கல்லூரி ஆகிய கல்வியியற் கல்லூரிகளும், கோப்பாய் ஆசிரிய கலாசாலை, கெட்டஹல ஆசிரியர் கலாசாலை, மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை, கிழக்கு மாகாண ஆசிரிய மத்திய நிலையம், அக்கராயன் ஆசிரியர் மத்திய நிலையம், மட்டக்களப்பு ஆசிரிய மத்திய நிலையம் ஆகியவற்றுக்கும் வெற்றிடம் காணப்படுகின்றன.

இது தொடர்பான மேலதிக விவரங்களைக் கடந்த மாதம் 23 ஆம் திகதி வெளியான வர்த்தமானியில் பார்வையிட முடியும், விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் “செயலாளர் கல்வி அமைச்சு, இசுறுபாய பெலவத்தை, பத்திரமுல்ல’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor