ஆங்கிலம் பேசுதல், வாசித்தலுக்கு 2015 முதல் மேலதிகமாக 10 புள்ளி – ஜனாதிபதி

mahinda_rajapaksaநாட்டின் சகல பிள்ளைகளினதும் மொழித் தேர்ச்சியை முன்னேற்றும் யுகம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். ஆங்கிலம் உட்பட சகல மொழிகளினதும் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி அதனை ஊக்குவிக்கும் வகையில் சகல செயற் திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மொழித் திறனை ஊக்குவிக்கும் வகையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச, வாசிக்க முடியுமான திறமைக்கு 10 புள்ளிகளை மேலதிகமாக வழங்கும் திட்டம் 2015 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

வாழ்க்கைத் திறனுக்கான ஆங்கிலம் எனும் ஜனாதிபதி செயலணி செயற்திட்டத்தின் மூன்றாம் கட்டம் நேற்று ஜனாதிபதியால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

10 ஆம், 11 ஆம் ஆண்டுகளில் கல்வி கற்கும் மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் வகையில் டிஜிட்டல் இறுவட்டும், ஆறாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக ஆங்கிலப் பயிற்சிக் கையேடு ஒன்றும் இதன்போது ஜனாதிபதியினால் வெளியிட்டு வைக்கப்பட்டு சகல மாவட்ட மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன.

அமைச்சர் பந்துல குணவர்தன உட்பட அமைச்சர்கள், மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா உட்பட சகல மாகாணங்களினதும் ஆளுநர்கள் யுனிசெப் பிரதிநிதிகள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், முக்கியஸ்தர்களுடன் நாடளாவிய ரீதியிலிருந்து பெருமளவு ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி :

ஆங்கில மொழியைக் கற்பதற்காக புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆங்கில மொழிக் கற்றல் நடவடிக்கைக்காக நாம் பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தி வருகின்றோம். ஆங்கில மொழியில் தேர்ச்சி பெறுவதில் மாணவர்கள் வெற்றிகாண வேண்டும் என்பதே எமது இலக்கு.

ஆங்கில மொழியை தமது வாழ்வில் வசப்படுத்திக் கொள்வது அவசியமாகும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இலவசக் கல்வி ஆரம்பிக்கப்பட்டு பல தசாப்தங்கள் நிறைவுற்ற போதும் அதன் பலனை முழுமையாக அனுபவிக்க கடந்த காலங்களில் தடைகள் இருந்தன. அதற்குக் காரணம் ஆங்கில மொழி தெரியாதிருந்தமையே.

சகல பிள்ளைகளும் மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். ஆங்கில மொழியாக இருக்கட்டும் அல்லது வேறு சர்வதேச மொழிகளாக இருக்கட்டும் எமது மத்தியில் மொழிகளின் பிரயோகம் பலம்பெற வேண்டும்.

சிலர் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறு கிடைக்காவிட்டாலும் ஆங்கில மொழியைத் தெரிந்திருந்தால் அவர் முன்னேற்றமடைய வழியுண்டு. எமது பிள்ளைகள் ஆங்கிலத்தைப் பேசுவதில் பின்வாங்கினர். பயப்பட்டனர். உச்சரிப்புக்கள் தவறினால் ஏனையோரின் பரிகாசத்திற்கு உட்பட வேண்டி வரும் என நினைத்தனர்.

ஆங்கிலம் ஒரு வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற யுகம் நிறைவடைந்து நாட்டில் சகல மாணவர்களும் ஆங்கில மொழியில் தேர்ச்சிபெற தற்போதைய அரசாங்கமே வழிவகுத்துள்ளது. ஆங்கிலத்தை வாழ்க்கையின் திறன் மொழியாகக் கற்று எதிர்காலத்தை வெற்றிகொள்வதற்கு எமது பிள்ளைகள் சந்தர்ப்பத்தை வாய்ப்பாக்கிக்கொள்ள வேண்டும்.

அத்துடன் சகல பாடசாலைகளுக்கும் பல் ஊடகத்தை அறிமுகப்படுத்தும் செயற்றிட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து பெருமளவு மாணவர்கள் கலந்துகொண்டிருந்த இந்த நிகழ்வில் ஜனாதிபதி தமிழிலும் உரையாற்றினார்.

ஆங்கிலம் கற்க அரசாங்கம் சகல வசதிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அதனைப் பயன்படுத்தி சர்வதேச ரீதியில் புகழ்பெற வழிவகுத்துக்கொள்ள வேண்டும், அதுவே எமது விருப்பம்.

அதேபோன்று பெற்ற தாய் தந்தையையும் அதேவேளை தாய் நாட்டையும் மறக்கக்கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன, மத, குல, மாகாண பேதங்களின்றி சகலரும் ஒற்றுமையாக வாழ்வது அவசியமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இம்மாதம் 23 ஆம் திகதி முதல் தேசிய ரூபவாஹினித் தொலைக்காட்சியில் மேற்படி ஆங்கில மொழி டிஜிட்டல் இறுவட்டு தொடர்பான தொடர் நிகழ்ச்சிகள் பிரதி சனிக்கிழமை தோறும் இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.