அவுஸ்ரேலியா சென்ற 157 இலங்கை அகதிகள் கடல் வழியாக விரட்டியடிப்பு?

akathikal-boardபுதுச்சேரியில் இருந்து சென்று அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகள் 157 பேரும், அவசர கால படகுகள் மூலம் கடல் வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக இந்திய செய்தி தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்தியா திரும்ப மறுத்த இலங்கை அகதிகளை நவ்ரு தீவுக்கு அவுஸ்ரேலியா அரசு அனுப்பி வைத்தது. அங்கு அகதிகளில் 9 பேருக்கு அவசர கால படகுகள் கொடுத்து, பின்னர் அனைவரையும் அந்த படகிலேயே இந்தியா திரும்பும் படி உத்தரவிட்டதாக தெரிகிறது.

5 மணி நேரத்தில் இந்தியாவின் தென் கோடி நகரான கன்னியாகுமரிக்கு சென்றடைந்து விடலாம் என கூறி அதற்கான வரைப்படத்தையும் அதிகாரிகள் கொடுத்து அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரச கால படகுகளில் 157 பேரும் பயணிப்பது ஆபத்தானது என மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளனர். மேலும் அவுஸ்ரேலியாவின் செயல்பாடு அகதிகளை கேலி செய்யும் விதத்தில் உள்ளதாகவும் கண்டனம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வந்தவர்கள் உள்பட 157 இலங்கை அகதிகள் கடந்த ஜூன் மாதம் படகுகள் மூலம் அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்தனர். அவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைக்க அவுஸ்ரேலியா அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து இந்தியாவிடம் ஒப்படைக்க பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இந்தியா திரும்ப விருப்பம் இல்லை என்று அகதிகள் தெரிவித்துவிட்ட நிலையில் அவர்கள் அனைவரும் நவ்ரு தீவுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் ஆபத்தான நிலையில் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.