அரச சிறுவர் இல்லத்தில் உள்ள குழந்தைகளை தத்துக் கொடுங்கள் ; அரச அதிகாரிகள் பலரும் கோரிக்கை

கைதடி அரச சிறுவர் இல்லத்தில் உள்ள குழந்தைகளை குழந்தைகள் இல்லாத பெற்றோர்களுக்கு தத்துக் கொடுக்குமாறு அரச அதிகாரிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.கைதடி அரச சிறுவர் இல்லத்தில் 31 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள். அவர்களை பராமரிப்பதற்கு 7 பெண்கள் மாத்திரமே இருக்கின்றனர்.

31 சிறுவர்களை 7 பெண்கள்; பராமரிப்பதென்பது மிகவும் கடினமான விடயம். இதில் 2 தாய்மார்கள் வைத்தியசாலைகளில் சிறுவர்களை பராமரிக்க செல்லும் பட்சத்தில் மிகுதி 5 தாய்மார்களினாலும் 31 சிறுவர்களை சரியான முறையில் கவனிப்பது மிகவும் கஷ்டமானதொரு விடயம். என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

எனவே இவ்ற்றை எல்லாம் கருத்திற் கொண்டு ஆளணி வசதியை அதிகரிக்குமாறு பல தடவை கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது ஆனால் இதுவரை அதிகரிக்கப்படவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு பல இன்னல்களுக்கு மத்தியில் குழந்தைகளை பராமரிப்பதை விட குழந்தைகள் இல்லாத பெற்றோர்களுக்கு தத்துக் கொடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உரிய காலப்பகுதியில் இக்குழந்தைகளுக்கு தாய் மொழிப் பயிர்ச்சி கொடுக்கப்படாமல் விட்டால் அக்குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே உரிய அதிகாரிகள் குழந்தைகளின் எதிர்காலத்தில் கருத்திற் கொண்டு விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் அரச சிறுவர் இல்லத்தின் பராமரிப்பில் இருந்த பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts