‘அரசையும் ஆட்சியாளர்களையும் குறைகூறுவதே த.தே.கூ.வின் வழக்கம்’ – டக்ளஸ்

எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அதற்கான சூழலை உருவாக்கி கொள்ளும் அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையுடனும் நேர்மையான அணுகுமுறையையும் கொண்டிருக்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.

KN-daklas

காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வருகின்ற அரசையும் ஆட்சியாளர்களையும் எதிர்ப்பது மட்டுமன்றி, தமது சுயலாப அரசியலுக்காக குறைகூறி வருவதையும் கூட்டமைப்பு தமது வழக்கமாகக் கொண்டுள்ளது.

அந்தவகையில் இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் அனைவரும் இனப்படுகொலையாளிகள் என்று கூட்டமைப்பினர் தற்போது கூறிவருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தின்போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதன் ஊடாகவும் அவரை வெற்றி பெறச் செய்வதன் ஊடாகவும் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உரிய வகையில் தீர்வு காணமுடியுமென கூட்டமைப்பினர் பிரசாரங்களை முன்னெடுத்திருந்தனர்.

இதனடிப்படையில், ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் கூட்டமைப்பினர் சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் புதிய ஜனாதிபதியுடன் எந்த அடிப்படையில் முன்னெடுத்தனர்? என்றும் டக்ளஸ் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், தேசிய நிறைவேற்றுக் குழுவில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அங்கம் வகிக்கும் நிலையிலும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுந்தரப்பில் இருக்கின்ற நிலையிலும் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை கூட்டமைப்பினர் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்நிலையில், புதிய அரசுடன் இதய சுத்தியுடனும் நேர்மைத்தன்மையுடனுமான அணுகுமுறைகளை கொண்டிருப்பது அவசியமானது என்றும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அண்மையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் இரா.சம்பந்தன் உரையாற்றிய போது, கடந்த காலங்களில் கிடைக்கப் பெற்ற நல்ல பல வாய்ப்புகளை தாம் தவறவிட்டதையும் உணர்ச்சிப் பேச்சுக்களால் எதையும் சாதிக்க முடியாது என்பதையும் நடைமுறை சாத்தியமான வழியிலேயே பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென தெரிவித்திருந்ததையும் டக்ளஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.