அரசு புனர்வாழ்வு என்று கூறுவது எது என எமக்குத் தெரியவில்லை; ப.தர்ஷானந்த்

30979_125091190983003_549360036_nஅரசு புனர்வாழ்வு என்று கூறுவது எது என எமக்குத் தெரியவில்லை. நாம் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாள்களில் சிங்கள மொழியையே எமக்குப் கற்பித்தது அரசு.
இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார் வெலிக்கந்தை முகாமில் தடுத்துவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த்.
தடுத்துவைக்கப்பட்டிருந்த தங்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு குறித்துக் கூற முடியுமா? என்று நேற்று மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந்தனிடம் வின வியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமக்கு வழங்கப்பட்ட புனவாழ்வு தொடர்பிலும், தாம் தடுத்துவைக்கப்பட்ட இரண்டு மாதக் காலப் பகுதியில் நடந்த சம்பவங்கள் குறித்தும் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

கடந்த டிசம்பர் முதலாம் திகதி அதிகாலைவேளை பயங்கரவாதத் தடுப்புப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட நாம், வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்டோம்.
அங்கு பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரின் அலுவலகத்தில் 10 நாள்களாகத் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டோம்.

எம்மிடம் ரி.ஐ.டியினர் துருவித்துருவி விசாரணை நடத்தினர். ஆனால், நாம் அச்சமடையாமல் அவர்களிடம் தெளிவாகக் கூறியது என்னவெனில், “யாழ். பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் எவரும் அரசியலில் ஈடுபடவில்லை.

தமிழர் உரிமைப் போராட்டத்தில் மரணித்த எமது உறவுகளை மட்டும் நாம் நினைவுகூர்ந்து மாவீரர் நாளன்று விளக்கேற்றினோம்” என்று தெரிவித்தோம். அத்துடன், மாணவர்கள் மீதான படையினரின் தாக்குதல்களுக்கு எதிராகவே நாம் அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம் எனவும், வன்முறைகளைத் தூண்டிவிடும் விதத்தில் மாணவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் செயற்படவில்லை எனவும் கூறினோம்.

இதேவேளை, வெளிநாட்டில் இருக்கும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கின்றதா எனவும், வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி எடுத்தீர்களா எனவும் ரி.ஐ.டி.யினர் எம்மிடம் விசாரித்தனர். அந்தக் கேள்விகளுக்கு “இல்லை” என்றே பதிலளித்தோம்.

அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்றோ அல்லது அவரின் நாமத்துடன் வாழ்கின்றோம் என்றோ நாம் ரி.ஐ.டி யினரிடம் தெரிவிக்கவில்லை.

இதேவேளை, ரி.ஐ.டியினரின் விசாரணையின் போது நாம் எவ்வித துன்புறுத்தல்களுக்கும் ஆளாகவில்லை என்பதைக் கூற விரும்புகின்றோம். எமக்கு அவர்கள் அடிக்கவில்லை; உதைக்கவில்லை; சித்திரவதைப் படுத்தாமல் எம்மை விசாரித்தார்கள் என்பதுதான் உண்மை.

வவுனியாவில் 10 நாள்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த நாம் பின்னர் வெலிக்கந்தை முகாமுக்கு மாற்றப்பட்டோம். அங்கு எமக்கு புனர்வாழ்வு என்று கூறினார்கள்.

அங்கு இரண்டு மாதங்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த எமக்கு புனர்வாழ்வு என்று அரசு எதனைத் தந்தது என்று தெரியாது. அங்கிருந்த நாள்களில் சிங்களமொழியையே பெரும்பாலான நாள்களில் எமக்குக் கற்பித்தார்கள்.

அத்துடன், இடையிடையே வெலிக்கந்தையில் இருந்த முன்னாள் போராளிகளுக்கு அரசு வழங்கிய “கவுன்ஸிலிங்’கில் (உளநலப் போதனை) எம்மைக் கலந்து கொள்ளச் செய்தார்கள். இதை விடுத்து பெரிதாக அவர்கள் எமக்கு ஒன்றையும் வழங்கவில்லை.

அங்கிருந்த முன்னாள் போராளிகளுக்கு மட்டும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டன. நாம் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற படியால் படிப்பதற்குரிய ஒழுங்குகளைச் செய்தார்கள். மேசைகள், கதிரைகள் தந்தார்கள். பெற்றோர் கொண்டு வந்து தந்த எமது பாடக் குறிப்புகளைக் கற்றோம். வெலிக்கந்தை புனர் வாழ்வு முகாமிலும் நாம் எவ்வித சித்திரவதைகளுக்கும் ஆளாகவில்லை என்பதைக் கூற விரும்புகின்றோம்.

எமது விடுதலைக்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அயராது குரல் கொடுத்து, கண்டனங்கள் வெளியிட்டு, போராட்டங்கள் நடத்தி அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்த அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்தார் தர்ஷானந்த்.

Recommended For You

About the Author: Editor