அரசியல் கைதிகள் குறித்து ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்! : அமைச்சர் சுவாமிநாதன்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை வவுனியாவிற்கு மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டுமென, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்திற்குச் வந்துள்ள அமைச்சரிடம், குறித்த அரசியல் கைதிகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வெளிநாட்டிற்குச் சென்றுள்ள சட்டமா அதிபர் நாட்டிற்கு திரும்பி வந்ததும் இவ்விடயத்தில் ஒரு சாதகமான நிலை ஏற்படுமென எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் சுவாமிநாதன், குறித்த மூன்று அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு வவுனியாவிற்கு மீள மாற்றப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கையென்றும் குறிப்பிட்டார். எனினும், அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுமா என கூறமுடியாதென அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

கடந்த மூன்று வார காலமாக அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை வவுனியாவிற்கு மாற்றுவது குறித்து, பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இவ்விடயம் தொடர்பாக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, நேற்றைய தினம் ஜனாதிபதியுடனும் கலந்துரையாடப்பட்டது. எனினும், சட்டமா அதிபரும் நீதியமைச்சரும் நாட்டில் இல்லாத காரணத்தால் அவர்கள் திரும்பி வந்த பின்னர் இவ்விடயம் குறித்து கலந்துரையாடி பதிலொன்றை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts