Ad Widget

அரசியல் கைதிகளின் விடுதலையில் கடந்த கால உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படவில்லை – சுரேஷ்

இலங்கையில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள் அனைத்தும் மீறப்பட்ட சூழ்நிலையே காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரத்தியேக நீதிமன்றங்களை அமைத்து அரசியல் கைதிகளின் விசாரணையை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்வதாக முன்னர் கூறியிருந்த போதிலும் அதற்கான சரியான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் அரசியல் கைதிகள் சிறப்பு முகாம்களுக்கு அனுப்பட்டு, புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்படுவார்கள் என வழங்கிய வாக்குறுதியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போது நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்குள் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதியும் தற்போது நிராகரிக்கப்பட்ட சூழ்நிலையே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குறுதியை வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் அரசியல் கைதிகள் தொடர்பான தமது முடிவை தெளிவாக எடுத்துக்கூறியுள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் ஒரு சிலருக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாவிடின் அவர்களின் பெயர் விபரங்களை பெறுவதன் ஊடாக அவர்கள் என்ன காரணத்திற்காக விடுவிக்கப்படவில்லை என்பதை பின்னர் ஆராய முடியும் என தாம் சம்பந்தனிடம் எடுத்துக்கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் தாம் கலந்துரையாடுவதாக சம்பந்தன் குறிப்பிட்டதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

எனினும் தற்போது சொற்பமானவர்களை மாத்திரம் பிணையில் விடுவிப்பது என்ற நிலை வந்துள்ளதை ஊடகங்களில் ஊடாக அறிய முடிவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமன்னிப்பு என்பது இலங்கையில் புதிய விடயம் அல்லவென சுட்டிக்காட்டிய அவர், ஜே வி பி காலத்திலும், இலங்கை – இந்திய உடன்படிக்கை எட்டப்பட்ட காலத்திலும் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

யுத்தம் இடம்பெற்ற நாடொன்றில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பொதுமன்னிப்பு வழங்குவது வழமையான ஒன்றாக இருந்து வருவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் இரண்டாம் பட்சமாக நடத்தப்படாமல், அவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இராணுவ தளபதிகள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்றால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் போது தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு கொடுத்து இரண்டையும் சமப்படுத்தும் நோக்கத்திற்காக, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதப்படுத்தப்படுகின்றதா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்

தற்போதுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 5 தொடக்கம் 20 வருடங்கள் வரை சிறையில் வாடுவதாகவும் இதன்மூலம் 10 தொடக்கம் 40 வருட சிறைத்தண்டனையை அவர்கள் அனுபவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்தினர் எவருக்கும் தண்டனை கொடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய சுரேஷ் பிரேமச்சந்திரன், அவர்கள் சிறைக்கு வெளியே உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எனவே இராணுவத்தினரையும் அவர்களையும் ஒப்பிடாமல், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts