வட. மாகாணத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பலம் சேர்க்க முன்வருமாறு வட.மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமது வழக்குகளை தமிழ் பிரதேசங்களுக்கு மாற்றக் கோரியும், வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிவுகாண வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கைகளை இழுத்தடிக்காது உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தமிழ் பொது அமைப்புகளால் வட மாகாணம் தழுவிய பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கதவடைப்பு போராட்டமானது தமிழர்கள் போராடித்தான் உரிமைகளைப் பெறவேண்டும் என்ற யதார்த்த நிலையை உணர்த்தி நிற்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமாக நடவடிக்கைகளை முன்னெடுக்காது பொய்யான வாக்குறுதிகளை வழங்கி காலம் தாழ்த்தும் அரசாங்கத்தின் தந்திரத்தனமாக போக்கை எமது ஒன்றுபட்ட பலத்தின் மூலம் முறியடிக்க தாயக மக்கள் அனைவரும் கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்பது காலத்தின் கட்டாயமாகும்.
அநீதியான முறையில் சிறைவாசம் அனுபவிக்கும் 132 தமிழ் உறவுகளுக்காக நாம் உறுதுணையாக இருக்கிறோம் என்பதையும் அவர்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்பதையும் இலங்கை அரசு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடித்துரைக்கும் விதமாக போராட்டத்தில் பங்கேற்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.