இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து, இன்று (புதன்கிழமை) காலை இந்த வழிபாட்டை நடத்தியுள்ளனர்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும், இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறாமல் உள்ளது. அத்தோடு, வழக்குகள் இடமாற்றப்பட்டமைக்கு எதிராக அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் மூவர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டுமென கோரி சிதறு தேங்காய் உடைத்து நல்லூரானிடம் மனமுருகி வேண்டுதல் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக கடந்த மாதம் 29ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அத்தோடு, கடந்த 5ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், எனினும் இரு கடிதங்களுக்கும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கப் பெறவில்லையெனவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.