அரசியல் அதிகாரங்களுக்காக மண்டியிட்டு கையேந்த மாட்டேன்: கே.செவ்வேல்

UPFA-logo_CI‘மக்களோடு மக்களாக இருந்துகொண்டே மனமுவந்து சேவைசெய்து கொண்டிருக்கின்ற நான் அரசியல் அதிகாரங்களுக்காக மண்டியிட்டு கை ஏந்தி நிற்பவன் அல்ல’ என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பின் வேட்பாளர் கே.செவ்வேல் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘பிரசாரங்கள் முற்றிய நிலையில் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அரசியல் பயணங்களுக்கு அப்பாற்பட்ட வாக்குறுதிகளை அள்ளியிறைத்துக் கொண்டிருக்கும் வேட்பாளர்களுக்கு செவ்வேல் ஆகிய நான் பகிரங்க விவாதத்திற்கு அறைகூவல் விடுக்கின்றேன்.

மக்களோடு மக்களாக இருந்துகொண்டே மனமுவந்து சேவைசெய்து கொண்டிருக்கின்ற நான் அரசியல் அதிகாரங்களுக்காக மண்டியிட்டுக்கொண்டு கை ஏந்தி நிற்பவன் அல்ல.

தோல்வியைத் தோலில் ஏந்தி இழப்புக்களை நெஞ்சில் சுமந்து இருப்பிடங்கள் இழந்த நிலையில் அழையும் மக்களுக்கு அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் நேரம் இதுவென்று தெரிந்தே மக்களின் வேண்டுகோளின்படி அரசியலுக்குள் நான் இறங்க முன்வந்தேன்.

அதில் நான் வெற்றி பெறலாம். அல்லது பெறாமல் போகலாம். அது தொடர்பான எந்தவித ஆட்சேபனையும் இல்லை. எனது மக்கள் சேவை என்றுமே தொடரும் என்பது மட்டுமே எனக்குத் தெரியும்.

அடிப்படை வசதிகளின்றி அல்லல்பட்ட மக்களின் தேவைகளை உணர்ந்து சேவையாற்றி வருகின்ற நான் அர்த்தமற்ற அரசியல் திசைமுகங்களை மக்களின் வாழ்வியலுக்கு எதிராக அரங்கேற்ற என்றுமே துணை நிற்கமாட்டேன்.

அன்று இணக்கப்பாட்டை எதிர்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இணக்கப்பாட்டின் திசைமுகத்தைத் திரும்பிப் பார்க்கின்றது.

அன்று மாகாணசபை மூலம் எதையும் பெற முடியாது என்று சொன்ன அதே கூட்டமைப்பு இன்று அரசியல் தீர்வையே வென்றெடுத்துத் தருவதாக உறுதியளித்துள்ளது.

இதனை முன்பு உணர்ந்து செயற்பட்டிருந்தால் உசுப்பேற்றும் செயற்பாடுகளிலிருந்து விலகி தமிழ் மக்களை
இழப்புக்களிலிருந்து மீட்டிருக்கலாம். நடந்து முடிந்தவை போக நடக்க இருக்கும் அரசியலையும் அர்த்தமற்றதாக்க முனைகின்றது கூட்டமைப்பு.

மக்களின் அபிவிருத்திக்காகவோ அரசியல் தீர்வுக்காகவோ எந்தத் தீர்வினை இதுவரை இந்த அமைப்பு முன்வைத்தது?

எனது அரசியல் பயணத்தில் தீர்க்கமானதும், தீர்வுக்கு சாத்தியப்படக் கூடியதுமான பல திசைமுகங்களை முன்வைத்து நான் நகர்ந்து கொண்டிருக்கின்றேன்.

எதை மக்களுக்கு சாதித்துக் கொடுக்க முடியும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். இது தொடர்பாக தமிழ் வேட்பாளர்கள் என்ற ரீதியில் ஒருமைப்பாடுகள் வேண்டும். முடியுமென்றால் வாருங்கள் முரண்பட்டாலும் தீர்வு காண்போம்’ என்றார்.