அரசியல் வாதிகளின் கருத்துக்களை கேட்டு ஏமாற்றம் அடைய வேண்டாம் என யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாதுகாப்பு படைப்பிரிவினரால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டை கையளிக்கும் நிகழ்வு யாழ். உரும்பிராய் பகுதியில் நேற்றய தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
அரசியல் வாதிகள் தங்களின் நன்மையை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படுகின்றார்களே தவிர மற்றவர்களின் நன்மைகளை கருதுவதில்லை. மக்களாகிய நீங்கள் அரசியல் வாதிகளிடம் ஏமாறாமல் அவர்களின் செயற்பாட்டினை உணர்ந்து நடந்து கொள்ள வேணடும். அது உங்களின் பொறுப்பாகும் என்றார்.
இதேவேளை, எமது நாட்டினை ஆசியாவில் உள்ள மற்றைய நாடுகளைப் போல் சிறந்த நாடாக மாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும். அரசாங்கத்தின் உதவியோடு வாழந்தால் மட்டுமே உங்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், தேவையற்ற விடயங்களையும் சமூகத்திற்கு இருட்டான விடயங்களையும் கதைத்துக் கொண்டு மீண்டும் இந்த நாட்டில் யுத்ததினை ஏற்படுத்த வேண்டாம்.
அதுமட்டுமல்ல, அரசியல் வாதிகள் தங்களின் தேவைக்கு மட்டுமே அதாவது தேர்தலில் வாக்குகளை பெற வேண்டுமென்பதற்காக உங்களிடம் வருகின்றார்கள். நீங்கள் அதை நம்பி ஏமாற வேண்டாம்.
மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் ஏற்பட இடமளிக்க வேண்டாம்.இதற்க்கான தீர்மானத்தினை நீங்கள் தான் எடுக்க வேண்டும்.
முன்னர் பயங்கரவாதம் நிலவிய போது சிலர் மக்களை தப்பான வழிகளில் அழைத்துச் சென்றார்கள். ஆனால், இலங்கையில் இருக்கும் மக்கள் சமாதானத்துடன் வாழ்கின்றார்கள என நான் இப்போது உறுதியாக நம்புகின்றேன்.
இலங்கையில் இருக்கும் மக்கள் சமாதானத்துடன் வாழ்கின்றார்கள். இலங்கை இராணுவம் சமூகத்தின் தேவை அறிந்து சமூகத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார்கள்.
வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்ற மக்கள் அரசாங்கம் என்ன செய்கின்றது யாழ்ப்பாணத்தில் அதிகளவான இராணுவம் இருக்கின்றது அவர்கள் என்ன செய்கின்றார்கள் என கேள்வி எழுப்புகின்றார்கள்.
ஆனால், 2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில்; 43 ஆயிரம் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் இருந்தனர். ஆனால், தற்போது 13 ஆயிரத்து 400 இராணுவத்தினரே இங்கு இருக்கின்றார்கள்.
அரசியல் வாதிகள் தேவையில்லாது மக்களை குழப்பி வருகின்றார்கள். மீண்டும் இந்த நாட்டில் யுத்தத்தினை ஏற்படுத்த வழி வகுக்கின்றார்கள் இதற்கு நீங்கள் அனுமதிக்காது சமாதானத்துடன் வாழ்வதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.