அரசியலமைப்பு உருவாக்க செயற்பாட்டிலிருந்து வெளியேறவேண்டிய நிலமை ஏற்படும்

தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் யோசனையை அரசாங்கம் கைவிடுமேயானால், அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது, அதிலிருந்து வெளியேறும் நிலை உருவாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

தேசிய இனப்பிரச்சனைக்கு வடக்குக் – கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சி ஒன்றை அமைப்பதற்கு மக்களின் ஆணையைப் பெற்றுள்ளோம்.

இதுதொடர்பாக எப்படி ஒரு சிறந்த உடன்பாட்டுக்கு வரலாம் என்று சிறிலங்கா அரசாங்கத்துடன் நாம் பேசி வருகிறோம்.

விரிவான அதிகாரப் பகிர்வுக்காக நாம் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு காணும் விடயத்தை அரசாங்கம் கைவிடுமேயானால், அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது, அதிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.