அரசாங்கத்தின் விசாரணைக்குழு ஏமாற்று நாடகம்: அனந்தி

ananthy-sasikaran-tnaகாணமாற்போன உறவுகள் தொடர்பாக இலங்கை அரசு விசாரணைக்குழு அமைக்கப்படுமொன்று சர்வதேசத்திற்கு கூறி வருவது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும் என வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ‘எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவை இடம்பெறவுள்ளது. இதற்கு இலங்கை அரசு விசாரணைக்குழு அமைப்பதாக கூறுகின்றது. இது கண்துடைப்பு வேலையாகவுள்ளது. இவ்வாறான பல விசாரணைக்குழுக்கள் முன்னர் அமைக்கப்பட்டு இது வரையில் எதுவித தீர்வுகளும் வழங்கப்படவில்லை’ என்றார்.

ஆகையால் சர்வதேசம் இதில் நேரடியாகத் தலையிட வேண்டுமென்றும் அதன் மூலமும் மக்கள் அச்சமின்றி சாட்சியமளிக்க வேண்டும். நான் ராதிகாவை நட்பு ரீதியாக சந்தித்தேன். இலங்கையில் நடந்தவற்றினை கனடாவில் அவர் எடுத்துரைப்பார் என நம்புகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘இன அழிப்பு என்ற விடயம் ஒரு மைல்கல். போர்க்குற்றம் என்று கூறி சிறுவட்டத்திற்குள் இருந்த நாம், இன அழிப்பு என்ற செய்தியைக் கொண்டு எமது நகர்வுகளை கொண்டு செல்ல வேண்டும்.

என்னைக் கண்டு யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. சிறிய காலத்தில் தான் இந்த செயற்பாடுகள். ஓவ்வொருவரும் நூற்றுக்கு நூறு வீதம் மக்களைத் திருப்திப்படுத்த முடியாது’ என்றும் அவர் சொன்னார்.

‘நீங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணையப் போவதாக கூறுகின்றார்கள்’ என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

‘நான் சில கொள்கைகளுடன் அரசியலுக்கு வந்திருக்கின்றேன். கொள்கைகளிலிருந்து மாறாது எனது கடமைகளை செய்யும் போது, பல விமர்சனங்கள், பல குறைகள் வரலாம். இதற்காக நான் பின்னோக்கி செல்ல மாட்டேன். முன்வைத்த கொள்கைகளை நடைமுறைப்படுத்தியே தீருவேன்’ என்றார்.

‘அரசியலில் நான் நீண்டகால உறுப்பினராக இருப்பதற்கு சிந்திக்கவில்லையெனவும் நான் முன்வைத்த கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன்’ எனவும் அவர் தெரிவித்தார்.

‘தமிழ் தேசிய மக்கள் முன்ணணியில் இணைந்து கொள்வது என்பது பொய்யானது. மக்கள் என்னை ஏற்றுக் கொண்டால் போதும். எனது வளர்ச்சியை தாங்க முடியாதவர்கள் வதந்திகளை கூறுகின்றார்கள். நான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தான் இருந்து வருகின்றேன். அவ்வாறு கட்சியை மாறுவதென்பது கீழ்த்தனமான விடயமாகும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.