அமைதியை சீர்குலைக்கவே ஆர்ப்பாட்டம்

protest-arpaddam-stopதேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஆர்ப்பாட்ட போராட்டத்தை, யாழ். மாவட்ட கடற் தொழிலாளர்கள் சகலரும் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணையத்தின் தலைவர் கந்தவனம் சூரியகுமாரன், யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களின் கூட்டுறவு சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களின் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் தலைவர் வைத்திப்பிள்ளை இக்னேஸ் அருள்தாஸ் ஆகியோர் விடுத்துள்ள அந்த அறிக்கையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (15) யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் எதிர்ப்புப் போராட்டமானது மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளையும் குறிப்பிட்டு அரசுக்கு எதிரான அரசியல் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி ஆர்ப்பாட்டமானது, இருக்கின்ற பிரச்சினைகளை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி விடுவதாகவுள்ளது. பதிவு செய்யப்படாத சில அமைப்புக்களின் பெயர்களையும், பெயர்கள் இல்லாத அமைப்புக்களையும், கூலிக்குப்பிடித்த சிலரை தென் இலங்கையிலிருந்தும் அழைத்துவந்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எமக்குத் தெரிந்தவரை ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தருவதாக குறிப்பிடப்பட்டிருக்கும் மீனவ அமைப்புக்கள் முன்னர் நாங்கள் அறியாதவையாக உள்ளன.

அதேபோல் ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்வதாக குறிப்பிடப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்குள்ளும் பொதுவான பங்களிப்பு குறிப்பிடப்படவில்லை.

இவற்றைப் பார்க்கும் போது, யாழ்ப்பாண மக்களின் பெயரால், தென் இலங்கையிலிருந்து முகமறியாதவர்களை இங்கே அழைத்து வந்து மேற்படி ஆர்ப்பாட்டத்தை நடத்தி, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் சுயநலன்களை அடைந்து கொள்ளவே முயற்சிக்கப்படுகின்றது.

ஆகவே, யாருடைய சுய இலாபத்துக்காகவும் எம்மை பகடைக்காய்களாக பயன்படுத்திக் கொள்ள நாம் அனுமதிக்கப் போவதில்லை. எனவே பதினைந்தாம் (15.07.2014) திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் ஆர்ப்பாட்ட போராட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

எமது தொழில் சார்ந்த பிரச்சினைகள், எரிபொருள் மானியப் பிரச்சினை, இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள், பூர்வீக இடங்களில் மீன்பிடி போன்ற பல்வேறு பிரச்சினை தீர்ப்பதற்கு அரசுடன் சாதகமான முயற்சிகளை மேற்கொண்டுவரும் இவ்வேளையில் எமது பிரச்சினைகளை தீராப்பிரச்சினைகளாக வைத்திருந்து, அரசியல் இலாபம் பெற்றுக்கொள்ளவே ஆர்ப்பாட்டப் போராட்டத்தை ஏற்பாடு செய்த அமைப்புகள் விரும்புகின்றன. எனவே நாங்கள் கூட்டாக மேற்படி ஆர்ப்பாட்ட போராட்டத்தை நிராகரிக்கின்றோம், என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor