அமைச்சுப் பதவிகள் முக்கியமில்லை: ஒற்றுமையே குறிக்கோள்: சித்தார்த்தன்

siththarthan_bbcதமிழ் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் ஒரு பங்காளிகளாகவும் ஒரு சமத்துவமாகவும் இருக்கிறோம் என்பதை உணர்வதன் மூலம் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பும் மிகப் பெரியளவிலே இருக்க முடியும். இதுதான் முக்கியமே தவிர இந்த அமைச்சுப்பதவி என்பன முக்கியமான விடயமாக எனக்குத் தெரியவில்லை என வடமாகாண சபை உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

‘தமிழ் மக்கள் தங்களுடைய ஒற்றுமையை வலுப்படுத்தல், உணர்வுகளை வெளிப்படுத்தல் ஆகியவற்றிற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்ற பின்னர் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் கொள்கை ரீதியில் ஒர் உடன்படிக்கைக்கு வந்திருந்தன.

அதாவது, நான்கு கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு அமைச்சுப் பதவியும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரியை போனஸ் ஆசனம் மூலம் அவைத் தலைவர் பதவி கொடுப்பது என்ற கோரிக்கையை நான்கு கட்சிகள் மிக வலுவாக முன்வைத்தபோது அது கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிலை மாறி ஆனந்த சங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படவில்லை. இறுதியில் தமிழரசுக் கட்சி தங்களுக்கு இரண்டு ஆசனங்களையும் மற்றைய இரண்டு ஆசனங்களை ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோவிற்கும் கொடுத்தனர். ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ கட்சியால் கூறப்பட்டவர்கள் இல்லாமல் வேறு உறுப்பினர்களைத் தெரிவு செய்தனர்.

வடமாகாண சபையில் இருக்கக்கூடிய முக்கிய பொறுப்புக்களும் ஐந்து கட்சிகளுக்கும் பகிரப்படுகின்ற போதுதான், கட்சிகளிடையிலான ஒற்றுமை வலுப்படுத்தப்பட்டு தமிழ் மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ அந்த குறிக்கோளை நிறைவு செய்ய முடியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் ஒரு பங்காளிகளாகவும் ஒரு சமத்துவமாகவும் இருக்கிறோம் என்பதை உணர்வதன் மூலம் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பும் மிகப் பெரியளவிலே இருக்க முடியும். இதுதான் முக்கியமே தவிர இந்த அமைச்சுப் பதவி என்பன முக்கியமான விடயமாக எனக்குத் தெரியவில்லை’ என அவர் மேலும் தெரிவித்தார்.