அமைச்சர் டக்ளஸுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை!- உறவுகள் தெரிவிப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நாம் தயாரில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாகஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்உறவுகள் சங்கத்தின் தலைவி ஜே.கனகரஞசினி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு ஒருபோதும் நாம் செல்லமாட்டோம்.

அவர்தான், எமது தாய்மாரை நீதிமன்றம் வரை கொண்டு செல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்பதுடன் அவரினால்பலர் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு எமக்கு விருப்பமில்லை. இத்தகைய சூழ்நிலையிலேயே சர்வதேசத்திடம் எமக்கான நீதி வேண்டி போராடி வருகின்றோம்.

இதேவேளை இறுதி யுத்தத்தை நடத்தியவர்கள் ஆட்சிக்கு வருகின்றார்கள். அவர்களிடம் கையளித்த எமது உறவுகள் தொடர்பாக தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அதுவும் இதுவரை காலமும் நிறைவேறவில்லை” என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor