அபிவிருத்திப் பணிகளில் இந்தியா பங்களிப்பை வழங்கி வருகின்றது: வி.மகாலிங்கம்

mahalingam_indiaவட பகுதியின் அபிவிருத்திப் பணிகள் பலவற்றிலும் இந்தியா தனது பங்களிப்பை பல்வேறு வகைகளிலும் வழங்கி வருகின்றது. வடபகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டம் பல்வேறு கட்டங்களில் இடம்பெற்று வருகின்றது’ என யாழ்.இந்திய கவுன்சிலர் ஜெனர்ல் வி.மகாலிங்கம் தெரிவித்தார்.

இந்தியாவின் 67 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று நல்லூர் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

‘வவுனியாலில் 200 படுக்கைவசதிகளுடன் கூடிய வைத்தியசாலை நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதேபோன்று அடுத்த மாதம் யாழ்ப்பாணத்திற்கான யாழ்தேவி கிளிநொச்சி வரை வரவுள்ளது. விரைவில் காங்கேசன்துறை வரை இந்த சேவை நடைபெற ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகள் இடம்பெறத் தொடங்கியுள்ளதுடன் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் 21 தொழில் முயற்சிகள் நடைபெறுவதற்கான உதவிகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, எல்.ஐ.சி காப்புறுதி நிறுவனத்தின் இரணடு கிளைகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன’ என அவர் மேலும் தெரிவித்தார்.