அனுமதி வழங்கப்படாத சீன தடுப்பூசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு!!

கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் விவகாரத்தில், தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என அரச மருத்துவ ஆய்வுகூட அதிகாரிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, அந்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.

“ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை இன்று வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடுகின்றதா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.

சீன தடுப்பூசி குறித்த விடயங்கள் ஆரம்பத்திலிருந்தே தெளிவற்றதாக உள்ளது. இன்றுவரை சீன தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டிருக்கின்றனர்.

சீன தடுப்பூசி என்பது மூன்றாம்கட்ட ஆய்வுகளைக்கூட முடிவுறுத்தாத தடுப்பூசியாகும். தடுப்பூசி என்பது மூன்றாம்கட்ட பரிசோதனையிலேயே மனிதர்களுக்கு பொருந்துமா? தொற்றினை தடுக்கும் திறன் உள்ளதா? பக்கவிளைவுகள் உள்ளதா என்பதை அறியமுடியும்.

அப்படியொரு பரிசோதனையற்ற, உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதிக்காத இந்த சீன தடுப்பூசியை இறக்குமதி செய்ய ஏன் சில அதிகாரிகள் முயற்சிக்கின்றனர் என்பதுதான் தெரியவில்லை. இந்தியா – சீனாவுக்கு இடையிலான தடுப்பூசி போட்டி இன்று சுகாதார ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அதிகாரிகளிடையே ஏற்பட்டிருக்கின்றதா? எமக்கு சீனா, இந்தியா முக்கியமல்ல, இவ்விரண்டு நாடுகளும் முன்னர் ஆயுதங்களை வைத்தே மோதின. இன்று வர்த்தகத்தை வைத்து மோதுகின்றன. இதில் நாங்கள் தலையிடக்கூடாது. எந்த தடுப்பூசி சிறந்தது என்பதையே நாம் பார்க்கவேண்டும். என்றார்

Recommended For You

About the Author: Editor