அனுமதியின்றி நடாத்தும் விடுதிகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டும்: யாழ். மேயர்

jaffna_major_yogeswari_CIயாழ். மாநகரசபை எல்லைக்குள் மாநகர சபையின் உரிய அனுமதிபெறாமல் இயங்கிவரும் விடுதிகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டுமென்றும், மீறி நடாத்தப்படும் விடுதிகளின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார்.

‘யாழ். மாநகரசபை எல்லைக்குள் சபையின் அனுமதி பெறாமல் பல விடுதிகள் தனிப்பட்டவர்களால் நடாத்தப்பட்டு வருகின்றதாகவும் அவ்விடுதிகளில் சுகாதாரச் சீர்கேடு கலாசாரச் சீர்கேடு அதிகரித்து வருவதாகவும் விடுதிகளினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் சுற்றாடலில் வசித்து வரும் பொதுமக்களிற்கு பல அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் பல முறைப்பாடுகள் யாழ். மாநகரசபைக்கு கிடைத்துள்ளன.

இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறாமல் கண்காணிக் வேண்டியது மாநகர சபையின் கடமையாதலால் மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள விடுதிகள் சம்மந்தமாக சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்றும் அவர் கூறினார்.

‘இதனால் அனுமதியின்றி நடத்தப்பட்டு வரும் விடுதிகளை மூடுவதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் சபையின் அனுமதியின்றி எத்தகைய விடுதிகளும் நடாத்தப்படக் கூடாதென்றும் மீறி நடாத்தும் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.