அத்துமீறிய குடியேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : கஜேந்திரன்

kajenthiran-empeநாவற்குழியில் அத்துமீறி குடியேறிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு அமைச்சர் விமல் வீரவன்ஸ நேரில் வந்து காணி உறுதிகளை வழங்கி அந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சட்டரீதியானதாக ஆக்கிவிட்டு சென்றதை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

வளலாய் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை அங்கு மீளக்குடியேற்ற கோரியும் வலி வடக்கு மக்களை வளலாய் பகுதியில் குடியமர்த்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நேற்று திங்கட்கிழமை (16) காலை கோப்பாய் பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற கண்டன போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

யாழ் குடாநாட்டிலே, எந்த வகையிலும் சிங்களவர்களுடன் சம்பந்தப்படாத நாவற்குழி மண்ணிலே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக அநீதியான முறையிலே அவர்களை குடியேற்றிவிட்டு அத்துமீறி குடியேறிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு இலங்கை அமைச்சர் ஒருவர் நேரில் வந்து காணி உறுதிகளை வழங்கி, அந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சட்டரீதியானதாக மாற்றிவிட்டுச் சென்றுள்ளார். இந்தச் செயற்பாட்டை அனைத்து தரப்பினரும் வன்மையாக கண்டிக்கின்றோம்

இந்த குடியேற்றத்தை ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது அதனை அகற்ற வேண்டும். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் அவர்கள் இருக்க ஒரு நிலம் இல்லாமல் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கும் போது, எங்கிருந்தோ வந்தவர்களுக்கு இந்த மண்ணிலே காணிகள் கொடுக்கப்பட்டு அவற்றுக்கான காணி உறுதிகள் கொடுக்கப்பட்டது என்பதை ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக சகல வேறுபாடுகளையும் களைந்து எங்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Related Posts