அதிபருக்கெதிரான முறைப்பாட்டினை மீளப்பெறுமாறு மாணவனுக்கு மிரட்டல்

தன் மீது தாக்குதல் மேற்கொண்டார் என பாடசாலை அதிபர் ஒருவருக்கு எதிராக பாடசாலை மாணவன் காவல் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை மீளப்பெறுமாறு மாணவனுக்கு வலய கல்வி அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் , முறைப் பாட்டை மீளப் பெற்றாலே உயர்தர தர பரீட்சை அனுமதிக்க விண்ணப்பிக்க அனுமதிப்போம் என மிரட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

தீவக வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்று வரும் மாணவன் ஒருவன் கடந்த திங்கட்கிழமை பாடசாலைக்கு சென்ற போது , ஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யவில்லை என கூறி பாடசாலை அதிபர் மாணவனை தாக்கியுள்ளார்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த மாணவன் ஊர்காவற்துறை வைத்திய சாலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கி சிகிச்சை பெற்றுள்ளார். அந்நிலையில் இன்று புதன்கிழமை தன் மீது தாக்குதல் மேற்கொண்ட அதிபருக்கு எதிராக ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் மாணவன் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

அதனை அறிந்த வலய கல்வி திணைக்கள அதிகாரிகள் குறித்த மாணவனை தொடர்பு கொண்டு அதிபருக்கு எதிரான முறைப்பாட்டை மீளப்பெறுமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர்.அத்துடன் முறைப்பாட்டை வாபஸ் பெற்றாலே உயர்தர பரீட்சை அனுமதிக்கு விண்ணப்பிக்க அனுமதிப்போம் என மிரட்டியும் உள்ளனர்.

குறித்த சம்பவத்தினால் மாணவன் மிகுந்த மன அழுத்ததிற்கு உட்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.