அதிகாரத்தை பயன்படுத்தவும்: கிழக்கு முதலமைச்சருக்கு சம்பந்தன் கடிதம்

தென்னமரவடி மக்களின் காணி பிரச்சினையில் மாகாண சபை அதிகாரத்தை பிரயோகிக்குமாறு கிழக்கு முதலமைச்சர் நஜிப் அப்துல் மஜித்துக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அக்கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண காணி அமைச்சருக்கும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தில் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காணி ஆணையாளர் நாயகம் ஆர்.பி.ஆர்.ராஜபக்ஷ, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் சிறிமேவன் தர்மசேன, குச்சவெளி பிரதேச செயலர், திருகோணமலை பிரதி பொலிஸ் மா அதிபர், திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

திருகோணமலை மாவட்டம், குச்சவெளிப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள தென்னமரவடிப் பகுதி மக்கள், யுத்தம் முடிந்து தமது இடங்களுக்கு மீளத் திரும்பிய பின்னரும் தமது நிலங்களில் விவசாயம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் இல்லை. பதவி சிறிபுர கொலனி குடியேற்றக்காரர்கள் இந்த மக்களின் காணிகளில் தாங்கள் பலவந்தமாக செய்கை பண்ணிக் கொண்டு, இந்த மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து வருகின்றார்கள். எனவே இவ்விடயத்தில் உடன் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1. திருகோணமலை மாவட்டத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள பழமையான கிராமம் தென்னமரவடி.

2. 1983/84 இல் அங்கு 250 குடும்பங்கள் குடியிருந்தன.

3. 1984 டிசம்பரில் இந்தக் கிராமம் தாக்கப்பட்டது. சுமார் பத்துப் பேர் கொல்கலப்பட்டனர் பலர் காயமடைந்தனர்; வீடுகளும் சொத்துக்களும் அழிக்கப்பட்டன.

4. இதனையடுத்து அங்கிருந்த குடும்பங்கள் தப்பி ஓடி, அருகில் இருந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் தஞ்சம் புகுந்தன. அண்மையில் பதவி சிறிபுரவில் குடியேற்றப்பட்டவர்களாலேயே இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

5. நீண்ட காலம் இழுபட்ட யுத்தம் காரணமாக, மேற்படி குடும்பங்கள் தங்களுடைய கிராமத்துக்குத் திரும்ப முடியவில்லை. எனினும் யுத்தம் முடிவுற்றமையை அடுத்து அவர்கள் திரும்பத் தொடங்கினார்கள்.

6. சுமார் 150 குடும்பத்தவர்களும் அவர்களது வம்சத்தினரும் தென்னமரவாடிக்குத் திரும்பினராயினும் அவர்கள் மிகக் கஷ்டமான சூழ்நிலையிலேயே வாழ்கிறார்கள். எஞ்சிய குடும்பங்களும் அவர்களது பிள்ளைகளும் இன்னும் திரும்பவில்லை. அதற்குப் பிரதான காரணம் வீடுகளோ, வாழ்வாதாரங்களோ அவர்களுக்கு அங்கு இல்லை என்பதாகும். கிராமத்துக்குத் திரும்பியவர்களுக்குக் கூட நிரந்தர வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

7. தென்னமரவடிக்கு மீண்டு, அங்கு தற்போது வசிக்கின்ற குடும்பங்கள் கூட அவர்கள் திரும்பியவேளை தொட்டு, அவர்களின் வயல் செய்கை விடயத்தில் சொல்லொணா நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. அவர்கள் தங்கள் நிலங்களில் பயிர்ச் செய்கை செய்வது பதவி சிறிபுர குடியேற்றவாசிகளால் (கொலணியினரால்) தடுக்கப்படுகின்றது. இந்தக் குடியேற்றவாசிகளில் ஒரு பகுதியினர் இந்தக் காணிகளில் பலவந்தமாகத் தாமே செய்கை பண்ணுகின்றனர்.

8 தென்னமரவடியைச் சேர்ந்த பலர் தங்களின் நெற்காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் வைத்திருப்பதுடன் பல தசாப்தங்களாக அங்கு செய்கை பண்ணியும் வருகின்றார்கள். நிலம் இல்லாத சிலர் இடப்பெயர்வுக்கு முன்னர் நிலம் வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும் அதற்கான அனுமதிப்பத்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. இவர்களுள் சிலருக்கு தாங்கள் மீளத் திரும்பி வந்த பின்னர் அனுமதிப்பத்திரத்தைப் பெற முடிந்துள்ளது. தெரிவுசெய்யப்பட்ட எஞ்சியோரால் அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. காணி இல்லாத மேலும் பலர் தமது கிராம சேவையாளர் பிரிவில் நிலம் பெற விரும்புகின்றனர்.

9. தென்னமரவடி மக்களுடனும், பதவி சிறிபுர மக்களுடனும் தொடர்பாடல் மேற்கொள்வதன் மூலம் இந்த விடயத்தைத் தீர்ப்பதற்கு மாகாண மற்றும் மாவட்ட அதிகாரிகள் பிரயத்தனம் மேற்கொண்டனர்.

10. அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் தென்னமரவடியைச் சேர்ந்தோர் தங்கள் நிலங்களில் இந்த வருடம் முதல் செய்கை பண்ணுவதற்கு உரித்துடையவர்கள் என்ற அடிப்படையிலான இணக்கத்தோடு கடந்த வருடத்தில் ஓர் உடன்பாடு எட்டப்பட்டது. இந்த உறுதிப்பாட்டின் அடிப்படையில் கடந்த வருடம், கடைசி முறையாக நெற்செய்கை பகிர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

11. எனினும் தென்னமரவடி மக்களுக்குத் தங்களின் அனுமதிப்பத்திரத்தின் படி சட்டரீதியாகவும் – அதேவேளை, கடந்த வருடம் வழங்கப்பட்ட உறுதிமொழியின்படியும் – தங்களின் நிலத்தில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு முழு உரித்தும் இருக்கின்ற போதிலும், பதவி சிறிபுர, குடியேற்றவாசிகள் மீண்டும் ஒரு தடவை அவர்களை அதனை மேற்கொள்ள விடாமல் தடுக்கின்றார்கள்.

12. அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர் சட்டரீதியாகத் தமக்குள்ள உரித்துப்படி விவசாயம் செய்வதற்கு உதவ அதிகாரிகள் விரும்பவில்லை அல்லது அவர்களால் உதவ முடியவில்லை. சில அதிகாரிகளின் செயற்பாடுகள் இதை விடவும் விரும்பத்தக்க விதத்தில் அமைந்திருக்க முடியும் என்பதை மட்டும் குறிப்பிட்டு, இதற்கு மேல் எதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் கூறுவதைத் தவிர்க்கிறேன்.

13. இந்தப் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்பட்டு, அனுமதிப்பத்திரம் உள்ளோர், அந்த அனுமதிப்பத்திரம் மூலம் உரித்து வழங்கப்பட்டுள்ள தமது காணிகளில் சமாதானமாக தமது நெற்செய்கையை ஆரம்பித்து, தொடர்வதற்கு வழி செய்யாவிடின் அது மீண்டும் தற்காலிக அல்லது நிரந்தர இடப்பெயர்வுக்கு வழி செய்வதுடன், அத்தகைய நிலைமை நல்லிணக்கம், நல்லெண்ணம், அமைதி, நீதி, சமத்துவம், ஆகியவற்றில் நேரெதிரான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அமைந்துவிடும்.

14. அதனால் பின்வரும் நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

I தென்னமரவடியில் அனுமதிப்பத்திரம் வைத்திருப்போரில் விரும்பியோர் தங்கள் நிலத்தில் அமைதியாக செய்கையை ஆரம்பித்து, தொடர்வதற்கு இடமளிக்க வேண்டும்.

II. தென்னமரவடிக்கு மீளத்திரும்பியோரில் காணி இல்லாதவர்களுக்கு அவர்கள் இங்கு மீளக்குடியமர்ந்து தமது வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு வசதியாக நெற்செய்கை நிலங்களும் குடியிருப்புக் காணிகளும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

III. தென்னமரவடி மக்கள் தங்களின் நெற்செய்கையை குழப்பம் ஏதுமின்றி ஆரம்பித்து தொடர்வதற்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் – பொலிஸார் – போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.

இந்த விடயம் கிழக்கு மாகாண சபையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறேன்.

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.