அச்சுவேலி முக்கொலை வழக்கு மேல் நீதிமன்றுக்கு மாற்றம்

அச்சுவேலி கதிரிப்பாய் முக்கொலை வழக்கின் பூர்வாங்க விசாரணைகள் முடிவுற்றமையால் வழக்கை யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவுள்ளதாக மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் திருமதி ஜோய் மகிழ்மகாதேவன், நேற்று வெள்ளிக்கிழமை (17) மன்றில் தெரிவித்தார்.

இந்த வழக்கின் பிரதான மற்றும் ஒரேயோரு எதிரியான பொன்னம்பலம் தனஞ்செயன் மூன்று கொலைகளையும் செய்தமை மற்றும் மேலும் இரண்டு மரணங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்தமை என்பன பூர்வாங்க விசாரணைகள் மூலமும், பொலிஸ் விசாரணைகளிலும் நிரூபனமாகியுள்ளது.

இதனையடுத்து, கொலை சந்தேகநபருக்கு எதிரான சாட்சி அறிக்கைகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட விசாரணை பிரிவுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக நீதவான் இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன், தனஞ்செயனை எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைத்தும் நீதவான் உத்தரவிட்டார்.

யாழ்.அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் மே மாதம் 4 ஆம் திகதி அதிகாலை ஒரே குடும்பத்தினை சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

நிக்குநானந்தன் அருள்நாயகி (50), யாசோதரன் மதுசா (27), நிக்குநானந்தன் சுபாங்கன் (19) ஆகிய மூவரும் பலியாகியிருந்ததுடன், தனஞ்செயன் தர்மிகா (25), க.யசோதரன் (30) ஆகிய இருவரும் படுகாயமடைந்திருந்தனர்.

இந்தக்கொலைகளை தர்மிகாவின் கணவரான தனஞ்செயன் செய்தார் என்ற சந்தேகத்தில் பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அத்துடன் கொலை தொடர்பிலான விசாரணைகளையும் மேற்கொண்டு வந்தனர்.

தனஞ்செயன் தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார்.

வழக்கின் கடந்த தவணைகளின் போது வழக்கு தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் மன்றில் இடம்பெற்று வந்ததுடன், தனஞ்செயனால் தான் முக்கொலைகளையும் செய்திருந்தனர் என அவரது மனைவி உள்ளிட்ட நால்வர் மன்றில் சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.