Ad Widget

அச்சுவேலி முக்கொலைச் சம்பவம் – நடந்தது இதுதான்

காமம் ஒரு மனிதனை எந்த அளவு ஆட்டிப் படைக்கின்றது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது அச்சுவேலி முக் கொலைச் சம்பவம். சினிமாப் படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் போன்றவற்றை மிஞ்சும் அளவுக்கு வில்லத்தனங்களுடன் கூடிய சம்பவங்கள் யாழ்ப்பாணத்திலும் இடம்பெறுவது மனதைக் கிலி கொள்ளச் செய்கின்றது.

Achchuvely-crime

பொன்னம்பலம் தனஞ்சயன் தனது சுயரூபத்தை மறைப்பதற்கு தன்னை ஊடகவியலாளராக உருமறைப்புச் செய்திருந்தார்.

வானொலி ஊடகங்கள் இரண்டில் வேலை செய்த தனஞ்சயன் எவ்வாறு தா்மிகாவை திருமணம் முடித்தார் என்பது வித்தியாசமான ஒரு நிகழ்வாகவே உள்ளது. காதலித்துத் செய்யும் திருமணங்கள்தான் கலக்கத்தில் முடிவடைகின்றன என்பது பலரது வாதம்.

ஆனால் இங்கு நடந்தது என்ன? குறித்த தனஞ்சயனை திருமணப் புறோக்கா் மூலமே பேசித் திருமணம் நடந்துள்ளது. அதுவும் தா்மிகாவின் அக்காவான கொலையுண்ட மதுசா அவா்களுக்கே குறித்த தனஞ்சயனை பேசியதாகவும் ஆனால் அவளுக்கு பொருத்தம் இல்லை என்று தெரிவிக்கவே தா்மிகாவைத் திருமணம் முடித்து வைத்ததாகவும் உறவினா்கள் தெரிவித்தனா்.

தனஞ்சயன் கொழும்பில் பிரபல இரு தமிழ் வானொலிகளில் அறிவிப்பாளராக வேலை செய்ததாலும் வசதியான குடும்பத்தில் பிறந்ததாலும் தா்மிகாவின் பெற்றோர் அவனைப் பற்றிய விசாரனைகளில் கொஞ்சம் இலகுவான போக்கைக் கடைப்பிடித்தாக அறிய முடிகின்றது. இருப்பினும் தனஞ்சயன் பற்றி இவர்கள் இரு வானொலிகளிலும் விசாரித்த பொது இவனைப்பற்றி அவர்கள் நல்லதாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.

25 வயதான தா்மிகா முன்னாள் புலிப் போராளியாவார். இவா் ஆயுதப்பயிற்சி எடுத்தது பற்றியும் அவள் வேலை செய்த புலிகளின் குறித்த ஒரு துறை பற்றியும் தனஞ்சயன் அவளை பதிவுத் திருமணம் செய்த பின் அடிக்கடி குத்தல் கதைகள் கதைததாகத் தெரியவருகின்றது. அத்துடன் தா்மிகாவை பல தடவைகள் நீ இயக்கத்தில் இருக்கும் போது ஏதாவது பாலியல் தவறு செய்தனீயா எனவும் கேட்டுள்ளார்.

தனது கணவன் பகிடிக்காகக் கதைப்பதாக நினைத்த தா்மிகா அவனைத் திருமணம் செய்த பின் அவனது சுயரூபத்தை அறிந்துள்ளார். உன்னை எனக்கு ஏமாற்றிக் கட்டி வைத்துவிட்டார்கள். உனது அக்கா நல்லவள். அவள்தான் என்ர கண்ணுக்குள்ள நிக்குறாள் என்றெல்லாம் தனஞ்சயன் கதைத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

திருமணம் முடித்து ஒரு கிழமைக்குள் தா்மிகாவைக் கடுமையாகத் தாக்கியதாகவும் அதனால் தா்மிகா தனது தாய் வீட்டில் வந்து இருந்ததாகவும் தெரியவருகின்றது.

தா்மிகாவின் உறவுக்காரரான இளம் பெண்கள் தா்மிகாவைச் சந்திக்கவோ அல்லது அவளது தாய் வீட்டுக்கோ வரும் போது தனஞ்சயன் அவா்களுடன் வம்பளக்க முற்பட்டு ஏச்சும் வாங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் அந்த இளம் பெண்களில் சிலருக்கு முகப்புத்தகத்தில் நட்பு அழைப்பும் விட்டுள்ளார். தனஞ்சயனின் குணம் தெரிந்ததால் அவனை எவரும் நட்பு வட்டத்தில் சோ்க்கவில்லை எனவும் தெரியவருகின்றது.

தா்மிகாவின் அக்காவான மதுசாவிற்கு அடிக்கடி தொலைபேசி மூலம் பல தடவைகள் தனது விருப்பத்தைத் தெரிவித்த தனஞ்சயன் சில வேளை நேரிலும் அழுத்தங்கள் கொடுத்துள்ளார். இதனால் தா்மிகா தனஞ்சயனை பல தடவைகள் எச்சரித்த போது தனஞ்சயன் தா்மிகா மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளார்.

இதே வேளை மதுசா அவா்களுக்கு வெளிநாட்டுத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனைத் தனஞ்சயனும் அறிந்துள்ளார். அறிந்தும் நல்ல பி்ள்ளை போல் நடந்து கொண்டு பதிவுத் திருமணம் வரைக்கும் எதுவுமே செய்யாது இருந்துள்ளார். பதிவுத் திருமணத்திற்கு முதல் நாள் இரவு மாப்பிளைக்கு தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு மதுசா என்னுடன் தொடா்பாக இருக்கிறாள். அவளும் நானும் பல முறை உடல் ரீதியாக இணைந்திருக்கின்றோம். அவள் என்னை விட்டு பிரிய மனமில்லாமல் இருக்கிறாள். அவள்தான் இதை உங்களுக்கு தெரியப்படுத்தச் சொன்னது. அவளுக்கு என் மூலமாக ஒரு குழந்தையும் பிறந்தது. அது நோர்வையில் உள்ள ஒரு தமிழ்க் குடும்பத்திடம் கொடுத்து வளா்கின்றது என அப்பட்டமாக பொய்யைக் கூறியுள்ளார்.

உடனடியாக மாப்பிளை வீட்டார் மதுசாவின் உறவினா்களுடன் தொடா்பு கொண்டு நிலமையை விளக்க அவா்கள் இவனின் திருகுதாளங்களைத் தெரிவித்துள்ளனா். இருந்தும் அவா்கள் அதை ஒத்துக்கொள்ளாது பதிவுத் திருமணத்தை நிறுத்தியுள்ளனா். இதனால் கடும் கோபமடைந்த தனஞ்சயனின் மனைவி தனஞ்சயனை விட்டுப் பிரிந்து தாயுடன் தங்கியிருந்துள்ளார். கடந்த பல மாதங்களாக தாயுடனேயே தா்மிகா தங்கியிருந்ததாகத் தெரியவருகின்றது.

இதே வேளை தர்மிகாவின் அக்காவான மதுசா தனஞ்சயனிடத்தில் அன்பு கொண்டிருந்ததாகவும் வானொளி அறிவிப்பாளராக இருக்கும் போது இவர்கள் இருவருக்கும் இடையில் தொலைபேசித் தொடர்பு இருந்ததாகவும் இதனாலேயே புறோக்கர் மூலமாக தனஞ்சயன் மதுசாவின் குடும்பத்தை அனுகியதாகவும் தனஞ்சயனின் நெருக்கிய ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இவர்கள் இருவருக்கும் இடையில் தர்மிகாவைத் திருமணம் செய்து முடித்த பின்னரும் தொடர்பு இருந்ததாகவும் ஒரு கட்டத்தில் மதுசா தர்மிகாவை தனஞ்சயன் தனக்காக கொலையும் செய்ய துணிந்துள்ளான் என அறிந்து அதன் பின்னர் விலகத் தொடங்கியதாகவும் தனஞ்சியனின் பக்கத்தில் இருந்து தெரியவருகின்றது, இதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை. தனது பக்கமும் நியாயம் இருக்கின்றது என தனஞ்சயன் இவ்வாறு சோடித்த பின்னர் கொலை செய்வதற்காக இவ்வாறு கூறியும் இருக்கலாம்.

மதுசாவின் திருமணக் குழப்பத்தின் பின்னர் இனி இவன் தனக்கு ஒரு போதும் தேவையில்லை என தா்மிகா தெரிவித்து மருத்துவத் தாதி வேலை பார்க்கத் தொடங்கியுள்ளார். இதன் பின்னா் பல தடவைகள் தா்மிகா தங்கியிருந்த வீட்டில் வந்து கலவரம் செய்து அது தொடா்பாக பொலிசாருக்கும் முறைப்பாடுகள் இடப்பட்டுள்ளன.

தனஞ்சயன் பொலிஸ் மற்றும் அரசசார்ப்புக் கட்சி ஆகியவற்றுடன் பெரும் செல்வாக்கு பெற்று ஒருவராக இருந்துள்ளார். மனைவி விவாகரத்துக்கு முறையிடச் சென்ற போதும் தனஞ்சயன் தாக்குவதாய் முறையிட்ட போதும் பொலிசார் அதில் அக்கறை செலுத்தவில்லை என உறவினா்கள் தெரிவிக்கின்றனா்.

தனஞ்சயன் தொடா்ந்து திருமணங்களைக் குழப்புவதால் இரகசியமான முறையில் மதுசாவிற்குப் மாப்பிளை பார்க்கப்பட்டுள்ளது. அரசாங்க உத்தியோகத்தராக இருக்கும் ஒருவரை பார்த்து திருமணம் இரகசியமான முறையில் நடைபெற்றுள்ளது. இதை அறிந்த தனஞ்சயன் பெரும் கோபமுற்றுள்ளார். திருமணமாகி மதுசாவும் மாப்பிளையும் முதன் முதலாக தனது தாய் வீ்ட்டுக்கு வந்துள்ளனா். அதனை யாரோ ஒருவர் மூலம் தனஞ்சயன் அறிந்துள்ளார். (பொலிசாரும் நீதிமன்றமும் இது யார் என அறிய முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது)

அதன் பின்னா் சம்பவதினம் இரவு அவா்கள் தங்கியிருந்த வீட்டில் தனது சொந்த ஆட்டோவில் வந்து மேற்படிக் கொடும் செயலைச் செய்து முடித்துள்ளார் தனஞ்சயன்.

இவா் தான் தனியாகவே இக் கொலைகளைச் செய்ததாகத் தெரிவித்துள்ளதோடு தான் வாளுடன் வீட்டுக்கு வரவில்லை என்றும் தன்னைத்தாக்க அவர்கள் தான் வாளை கொண்டு மிரட்டியதாகவும் இதன் போதே தான் அவர்களின் வாளை பறித்து அவர்களை வெட்டிக் கொலை செய்ததாகவும் தனது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கொலை நடந்த வீட்டிற்கு அருகில் உள்ளவா்கள் இது பற்றித் தெரிவிக்கும் போது ஒரு போதும் தனஞ்சயன் தனியாக இக் கொலைகளைப் புரிந்திருக்க முடியாது. இதற்கு பலரும் துணையிருந்திருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளனா்.

நள்ளிரவில் நடந்த கொலைச் சம்பவம் என்பதால் எவருக்கும் சரியான முறையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இருப்பினும் பொலிசாரின் விசாரணைகளில் இதுபற்றிய உண்மை நிலை தெரியவரும் என்று நம்புவோமாக.

தொடர்புடைய செய்திகள்

முக்கொலை சந்தேகநபருக்கு 16 வரை விளக்கமறியல்

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பதற்றம்

அச்சுவேலி முக்கொலை! நடந்தது என்ன?? – விளக்குகிறார் கொலையாளியின் மனைவி

அச்சுவேலியில் வாள்வெட்டு :சந்தேகநபர் இருவர் கைது

Related Posts