அசைவ உணவு இல்லையென சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிய சிறுவர்கள்

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றிருந்து தப்பிச்சென்ற சிறுவர்கள் மூவரையும், மீண்டும் அந்த சிறுவர் இல்லத்திலேயே சேர்க்கும்படி யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி நேற்று வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டார்.

மேற்படி சிறுவர் இல்லத்தை சேர்ந்த 08, 09, 11 வயதுடைய சிறுவர்கள் மூவர், சிறுவர் இல்லத்தின் மதில் பாய்ந்து கடந்த புதன்கிழமை (08) தப்பி ஓடியிருந்தனர்.

உரும்பிராய் பகுதியிலுள்ள வீதியில் இச்சிறுவர்கள் அலைந்து திரிவதை அவதானித்த பொதுமக்கள், அவர்களை பிடித்து வியாழக்கிழமை (09) இரவு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த இல்லத்தில் தங்களுக்கு அசைவ உணவு தரவில்லையென்ற காரணத்தால் அங்கிருந்து தப்பித்ததாக கூறினர்.

இதனையடுத்து, பொலிஸார் மூன்று சிறுவர்களையும் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.