அங்கஜனே என்னை கடத்தி தாக்கினார்: நிசாந்தன்

nishanthan02ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனே கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து கடந்த 03 ஆம் திகதி தன்னை கடத்தி அறையொன்றில் அடைத்து வைத்து தாக்கியதாக யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் நிசாந்தன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் வெள்ளத்தை மற்றும் யாழ் பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனிப்பட்ட காரணத்திற்காக கடந்த 03 ஆம் திகதி நான் கொழும்பு சென்றபோது வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த அங்கஜனின் தந்தை இராமநாதன் உள்ளிட்ட 6 பேர் என்னை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கடத்திச்சென்றனர்.

துப்பாக்கி முனையில் தன்னை அச்சுறுத்தி கடத்திச்சென்று கவிசித்தாராம மாவத்தையில் உள்ள அவர்களுடைய அலுவலகத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள அறை ஒன்றில் பூட்டிவிட்டு 2 மணித்தியாலயத்திற்கு மேல் தன்னைத் தாக்கியதாக அவர் குறிப்பட்டார்.

தன்னைத் தாக்கும் போது ‘ நாங்கள் யார் என்று தெரியுமா? எங்கள் பலம் தெரியுமா’ ‘ எங்கள் பின்னால் இருப்பவர்கள் யார் என்று தெரியுமா’ ‘ கூட்டமைப்பால் என்ன செய்ய முடியும்’ ‘ யாழ்ப்பாணத்தில் விபச்சார விடுதியைப் பிடிப்பதற்கு நீ யார்’ போன்ற பல்வேறு கேள்விகளைக் கேட்டு அவர்கள் தாக்கியதாக அவர் தெரிவித்தார்.

யாழில் விபச்சார விடுதி பிடிபட்டதற்கும் சுதந்திரக்கட்சிக்கும் எதுவித சம்மந்தமும் இல்லை என்று எழுத்து மூலமும் வீடியோ பதிவும் நீ தரவேண்டும் என்று மிரட்டியுள்ளதாகவும் தனது உடமைகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் எனது வீட்டின் மீது கைக்குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் தாங்கள் தான் என்று அங்கஜனின் தந்தை தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஆட்கடத்தல், உடமை அபகரிப்பு, போன்றன தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாவும் இந்தச்சம்பவத்தில் அங்கஜனும் நேரடியாக தொடர்பு பட்டிருந்ததாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி முன்னிலையில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் அவர்களிடம் கேட்டபோது நேற்றைய தினம் முறைபாடு தொடர்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட் இலக்கத்தை பெற்று வருமாறு தாங்கள் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை நாங்கள் விசாரணை செய்யமுடியாது என்று பொலிஸாரின் நடவடிக்கை குறித்து கண்காணிக்க முடியும் என்றும் கனகராஜ் தெரிவித்துள்ளார்.