வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜனின் தந்தை இராமநாதன், அவரது உதவியாளர் அன்பழகன் உள்ளிட்ட 9 பேருக்கு பகிரங்க பிடியாணை பிறப்பித்து யாழ். நீதவான் பொ.சிவகுமார் செவ்வாய்க்கிழமை (27) உத்தரவிட்டார்.
அடக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா மீது 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதியன்று தாக்குதல் மேற்கொண்டார் என்று குற்றச்சாட்டிலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட தம்பிராசா மீது யாழ்., மின்சார நிலைய வீதியில் வைத்து தாக்குதல் மேற்கொண்டு, அவரது வாகனத்தையும் சேதமாக்கியுள்ள மேற்படி சந்தேகநபர்கள், துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தலையும் விடுத்தார்கள் என்று யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
தனது முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லையென, தம்பிராசாவினால் சத்தியாக்கிரகப் போராட்டமொன்று யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த தாக்குதல் விவகார வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரசியல் காரணங்களுக்கு அப்பால் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும்படி பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், இந்த வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.