யாழ்.சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்சித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியுள்ளது.
மேலும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நியமனம் பெறவுள்ள சுகாதாரத் தொண்டர்கள் மாற்று வழியில் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களும் உள்ளேசெல்ல முற்பட்டமையால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தை மீள்பரிசீலணை செய்து வழங்குமாறு கோரி நேற்று காலை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சுகாதாரத் தொண்டர்கள் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
அத்தோடு தமக்கான நியமனத்தில் அநீதி இழைக்கப்படுவதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாட்டினை மேற்கொண்டனர்.
மேலும் இந்த போராட்டம் நேற்று இரவும் நீடித்ததுடன், இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.