வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்சவும் நானும் முழுமையான அர்ப் பணிப்புடன் செயற்படுவோம் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மைத்திரி – மகிந்த அணி இணைந்து ஏற்பாடு செய்திருந்த மக்கள் பலம் போராட்டம் கொழும்பு நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த வாரம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடன் பேசிய மைத்திரிபால, தான் உயிருடன் இருக்கும் வரையில் வடக்கு கிழக்கு இணைப்போ, கூட்டாட்சியோ வழங்க மாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறானதொரு நிலையிலேயே நேற்றைய தினம் மேற்கண்டவாறு உரையாற்றியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எமது நாட்டு அடித்தட்டு மக்களின் இன்ப துன்பங்களையும், கலாசாரத்தை அறியாது பன்னாட்டுச் சமூகத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டிருந்தார். அவருடன் தொடர்ந்து பயணிக்க முடியாது என்பதால் கருஜயசூரிய அல்லது சஜித் பிரேமதாசவை தலைமை அமைச்சராக நியமிப்பதற்கு அவர்களுடன் பேச்சுகள் நடத்தினேன். ஆனால், தவைருடன் மோத முடியாது என்று கைவிரித்தால்தான் ரணில் விக்கிரமசிங்கவை கவிழ்க்க மகிந்த ராஜபக்சவை தலைமை அமைச்சராக நியமித்தேன்.
நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நானும் மகிந்த ராஜபக்சவும் ஒரே மேடையில் மீண்டும் இணைந்துள்ளோம். அதற்காக சந்தோசமடைகின்றேன். நவம்பர் மாதம் என்பது எமது நாட்டில் முக்கியமான மாதமாகும். 2014ஆம் ஆண்ட நவம்பர் மாதம்தான் சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறி பொது வேட்பாளராக களமிறங்கினேன்.
நான் தலைமை அமைச்சர் கதிரையிலிருந்து இரண்டு உருவங்களையோ அல்லது இரண்டு மனிதர்களையோ மாற்றவில்லை. பன்னாட்டுச் சமூகத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்ட தோற்றத்தையே மாற்றியமைத்துள்ளேன். எமது நாட்டுக்கும் தேசிய கலாசாரத்துக்கும், வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலை நிராகரிப்பவரையுமே தலைமை அமைச்சராக நியமித்துள்ளேன்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக முடிவுகளை எடுத்தது அமைச்சரவை அல்ல. தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கதான்.
நான் தலைமை அமைச்சர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கும் தீர்மானத்தை சட்டநிபுணர்களுடன் கலந்து பேசியே முடிவெடுத்தேன்.
இந்தியாவுடனான எனது உறவைச் சீர்குலைக்க ரணில் விக்கிரமசிங்க சதி செய்கின்றார். அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டதாக ஒரு தவறான தகவலை அவர்களே வெளியில் கசியவிட்டனர். மக்கள் பலத்துடன் விளையாடவேண்டாம் என்று நான் அவருக்குச் சொல்கின்றேன்.
வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நானும், புதிய தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்சவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். மூன்று தசாப்தகால போரில் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் 50ஆயிரம் வீடுகளை அமைப்பதில் கடந்த மூன்றறை வருடகாலமாக nபிய முரண்பாடுகள் காணப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களின் இழுபறியினால் இதுவரை ஒரு வீடு கூட அங்கு கட்டப்படவில்லை – என்றார்.