தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகித்தால் நானும் நடுநிலைமை வகிக்கத்தயார் என கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை தமிழ் மக்கள் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எந்தவிதமான தீர்வுகளையும் பெற்றுக்கொள்ளவில்லை.
எனவே தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாட்டிலேயே கூட்டமைப்பு ஈடுபடுகின்றது. இவர்களுடன் இணைந்திருந்தால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது.
முடிந்தால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் எவருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலைமை வகிக்கட்டும். நானும் பதவியை விட்டு நடுநிலைமை வகிக்கின்றேன்.
எனக்கு நிச்சயமாகத் தெரியும் இவ்வளவு காலமும் எதையுமே சாதிக்காத கூட்டமைப்பு இனிமேலும் எதையும் செய்யப்போவதில்லை. அதுவும் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கண்டிப்பாக செய்யப்போவதில்லை.
எனவே இவர்களுடன் இருந்து எமது காலத்தை வீணடிப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.எவ்வளவு குறுகிய காலமாக இருந்தாலும் எமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி எமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.