ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிட்டக் கருத்து திரிபுப்படுத்தப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இதுதொடர்பில் நேற்றைய தினம்(புதன்கிழமை) தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதுடன், இதன்போது இந்த விடயம் குறித்து இருவரும் தெளிவுப்படுத்திக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் அலுவலகத்தினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில், இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் ஆகியோருக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை பாதிக்கும் நோக்கிலும் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதி முயற்சியில் இந்திய உளவுத்துறையின் எந்தவொரு ஈடுபாடு குறித்தும் ஜனாதிபதி இதன்போது கருத்து தெரிவிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.