வடமராட்சி கிழக்குக் கடலில் கடலட்டை பிடித்த வெளிமாவட்ட மீனவர்கள் பிரதேச மீனவர்களால் திட்டமிட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டனர். மடக்கிப் பிடித்த மீனவர்களை வைத்து உரிமையாளர்களை இனங்காண பிரதேச மீனவர்கள் திட்டமிட்டபோதும், பொலிஸார் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுச் சென்றனர்.
வடமராட்சி கிழக்குக் கடலில் வெளிமாவட்ட மீனவர்கள் கடலட்டைத் தொழிலில் ஈடுபடுகின்றமையை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முயன்ற பிரதேச மீனவர்கள் மனச் சோர்வுடன் திரும்பினர்.
வடமராட்சி கிழக்குக் கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்கள் கடலட்டைத் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்றும், அதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது என்றும் வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வடமராட்சி கிழக்குக் கடல்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்களால் மேற்கொள்ளப்படும் கடலட்டைத் தொழிலைத் தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் பல தரப்பினரிடம் கோரிக்கைகள் விடுத்திருந்ததுடன், பல போராட்டங்களையும் செய்திருந்தனர்.
இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 5ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆயியோர் கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் நாடாளுமன்றில் சந்தித்திருந்தனர்.
வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது. கடலட்டை பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் விதிக்கப்படும் நிபந்தனைகளை மீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றபோதும், கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் அமைச்சருக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.
கடலட்டை பிடிப்பதற்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் உரிய முறையில் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு, கடற்தொழில் நீரியல்வளப் பணிப்பாளருக்கு அமைச்சர் உடனடியாகவே பணிப்புரை விடுத்திருந்தார். அதன்பின்னரும் வடமராட்சிக் கிழக்குக் கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்களால் கடலட்டைத் தொழில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
வடமராட்சி கிழக்குக் கடற்பரப்பில் இரவு வேளை அனுமதியின்றிக் கடலட்டை பிடித்தனர் என்று தெரிவித்துக் கடற்படையினரால் 81 மீனவர்கள் கடந்த மாதம் 18 ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவர்களிடம் இரவில் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதி உள்ளது என்று தெரிவித்து கடற்படையினர் அவர்களை விடுவித்தனர். அதனால் உள்ளூர் மீனவர்கள் முரண்பட்டனர். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் வரும்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு மீனவர்கள் திட்டமிட்டனர்.
அதையடுத்து கடந்த மாதம் 22ஆம் திகதி கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் காமினி விஜித் விஜிதமுனி செய்சா யாழ்ப்பாணத்தில் வைத்து வடமராட்சி கடற்றொழில் சமாசத் தலைவர் வர்ணகுலசிங்கம், மீனவர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு கடற்றொழில் சமாசத் தலைவர் வே.தவச்செல்வத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் நகரில் உள்ள விடுதி ஒன்றில் சந்திப்பு நடைபெற்றது.
“கடற்றொழில் அமைச்சர் வடமராட்சி கிழக்கில் நடைபெறும் கடலட்டைத் தொழிலுக்கு தடை விதிக்கப்படும் என்று உறுதியளித்தார். அங்கு கடலட்டைத் தொழிலில் ஈடுபடும் இரு நிறுவனங்களின் செயற்பாடுகளும் நிறுத்தப்படும் என்றும் இரவில் ஒளிபாய்ச்சி மீன்பிடிப்பதற்கும் தடைவிதிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அமைச்சரின் உறுதிமொழியை அடுத்து போராட்டம் நடத்தும் முடிவை மீனவ சங்கங்கள் கைவிட்டன. இந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டங்கள் நடத்துவது பற்றி ஆலோசிப்பது என்று மீனவ சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.”- என்று இந்தச் சந்திப்பின் பின்னர் கடற்றொழில் சமாசத் தலைவர் வே.தவச்செல்வம் தெரிவித்திருந்தார்.
இந்தச் சந்திப்பை அடுத்து அரச தலைவர் வருகையின்போது நடத்தத் திட்டமிட்டிருந்த போராட்டத்தை வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கைவிட்டனர்.
தமது கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அட்டைத் தொழில் ஈடுபடுபவர்களை கையும் மெய்யுமாகப் பிடிப்பதற்கு வடமராட்சி மீனவர்கள் திட்டமிட்டனர். வடமராட்சி மீனவர் சங்கங்களின் சமாசத்துக்குட்பட்ட 12 சங்கங்களைச் சேர்ந்த மீனவர்களும் நேற்றுக் கடலுக்குச் செல்லவில்லை.
சக்கோட்டைக் கரையில் அமர்ந்திருந்தனர். அதிகாலை 3 மணியளவில் கடலட்டைத் தொழிலுக்குச் சென்ற வெளிமாட்ட மீனவர்கள் 8 பேரை மீனவர்கள் கையும் மெய்யுமாகப் பிடித்தனர். அவர்கள் பயணித்த படகுகளும் கடற்கரையில் தடுத்து வைக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட மீனவர்கள் சக்கோட்டைக் கடற்தொழிலாளர் சங்கக் கட்டடத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.
கடற்றொழில் அமைச்சரின் வாக்குறுதி பொய்த்துப் போயுள்ளது. மீன்பிடி அமைச்சர் உடன் நடைமுறைக்குவரும் வகையில் கடலட்டைத் தொழிலைத் தடைசெய்ய வேண்டும், டைனமெட் பாவனையை தடை செய்யவேண்டும், சுருக்கு வலை, ரோலர், ஒளி பாய்ச்சி மீன்பிடிக்கும் தொழில்களைத் தடை செய்ய வேண்டும்.
அதுவரை நாங்கள் பிடித்துள்ள மீனவர்களை விடமாட்டோம் என்று மீனவர்கள் தெரிவித்தனர். பிடிக்கப்பட்ட வெளிமாவட்ட மீனவர்களுக்கு உணவு, குடிதண்ணீர் வழங்கி அவர்களைப் பாதுகாப்பாகத் தடுத்து வைத்தனர்.
அரசியல்வாதிகள், பிரதேச செயலர், கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் காலை 10.30 மணியவில் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் மீனவர்களுடன் கலந்துரையாடினர்.
“அனைவரும் வாக்குறுதி வழங்குகின்றனர். ஆனால் அவை நிறைவேற்றப்படுவதில்லை. சட்ட விரோதத் தொழில்கள் இடம்பெறுகின்றன. கடற்தொழில் அமைச்சர் தடை உத்தரவை வழங்கிய போதும் கடலட்டைத் தொழில் இடம்பெறுகிறது. யார் அனுமதி வழங்குகின்றனர்?. மீனவர்களைப் பிடிப்பது எமது நோகக்கமல்ல.
எமது பகுதிகளில் இவ்வாறான தொழல்கள் இடம் பெறுவதைத் தடுப்பதே நோக்கம். இப்போதும் அந்தத் தொழிலை நிறுத்துவதற்கே மீனவர்களை பிடித்துள்ளோம். உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கடற்தொழில் அமைச்சர் எமக்கு உத்தரவாதம் தரவேண்டும். அதுவரை மீனவர்களை விடுவிக்க முடியாது” என்று வடமராட்சி மீனவர்கள் தெரிவித்தனர்.
கடலட்டைத் தொழிலுக்குத் தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவதற்கு மீனவர்கள் முடிவு செய்தனர். சக்கோட்டைக் கடற்தொழிலாளர் சங்கத்துக்கு முன்பாக கொட்டகைகளை அமைத்து போராட்டத்துக்கு தயாராகினர்.
அப்போது காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (தரம் 1) சம்பவ இடத்துக்கு வந்தார். மீனவர்களுடன் பேச்சு நடத்தினார். அவருக்கும் மீனவர்கள் தமது முடிவைத் தெரிவித்தனர். மீனவர்களை அச்சுறுத்தும் தொனியில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நடந்துகொள்ளத் தொடங்கினார்.
மீனவர்கள் ஒவ்வொருவரும் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கும்போது, தனக்கு அருகில் இருந்த பொலிஸ் அதிகாரியைப் பார்த்து “வீடியோ எடுங்கள்” என்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கூறியவண்ணம் இருந்தார். அனைவரையும் வீடியோ எடுங்கள் என்றும் அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார். அருகில் இருந்த அதிகாரியும் மீனவர்களைக் காணொலி எடுத்தார். அதனால் மக்கள் தமது கருத்தைத் துணிந்து கூற முடியாத நிலை ஏற்பட்டது.
நீங்கள் செய்வது சட்டப்படி சரியான நடவடிக்கை அல்ல. எம்மிடம் உங்கள் வீடியோக்கள் உள்ளன. உங்கள் அனைவரும் கைது செய்ய முடியும். காணொலிகளின் உதவியுடன் அனைவரையும் கைது செய்ய முடியும். 20 ஆண்டுகள் உங்களைச் சிறையில் அடைக்க முடியும் என்று கடுந்தொனியில் காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.
காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (தரம் 1) ஒருபுறம் மீனவர்களை அச்சுறுத்தும் தொனியில் பேசிக் கொண்டிருக்க ஏனைய பொலிஸார் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிமாவட்ட மீனவர்களை மெல்ல மெல்லத் தமது வாகனத்தில் ஏற்றினார்கள்.
அதைச் சற்றுத் தாமதமாகவே மீனவர்கள் அவதானித்து சங்க வளாகக் கதவை மூட முயன்றபோதும், அதற்குள்ளாக பொலிஸ் வாகனம் சீறி வெளியேறியது. அப்போது காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கேற்றை மூடச் சொன்னவரையும் வீடியோ எடுங்கள் என்றார்.
மீட்டுச் சென்ற வெளிமாவட்ட மீனவர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். இந்த விடயம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.