மன்னார் மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று (புதன்கிழமை) கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.
இன, மத பேதங்களுக்கு அப்பால் இலட்சக் கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற திருவிழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துக் கொண்டார்.
இதன்போது, மடு அன்னையின் ஆவணித் திருவிழாவிற்காக கிறிஸ்தவ அமைச்சினால் வழங்கப்பட்ட நிதி உதவியினை பிரதமர் மன்னார் ஆயரிடம் கையளித்தார்.
இன்று காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக மன்னார் மறைமாவட்ட ஆயர் லயனல் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகையின் அழைப்பின் பேரில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் ஒப்புகொடுக்கப்பட்டது.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவணியும், திருச்சொரூப ஆசியும் வழங்கப்பட்டது.
மடு அன்னையின் ஆசியை பெற்றுக் கொள்வதற்காக திருவிழாவில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், ரவி கருநாநாயக்க உட்பட அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 6 இலட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, மடு திருத்தலத்தின் புதிய பரிபாலகராக அருட்தந்தை பொப்பி சோசை அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெனான்டோ ஆண்டகை மக்கள் மத்தியில் இன்று அறிவித்தார்.
மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நவநாள் ஆராதனைகள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.