வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமையால் அங்குள்ள இளைஞர், யுவதிகள் அதற்கு அடிமையாக வாய்ப்புள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“தற்போதுள்ள அரசியல்வாதிகள் தமது அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவும் அதனை தக்கவைத்துக்கொள்ளவும் ஒருவரை ஒருவர் முரண்படுகின்றார்களே ஒழிய மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு வேண்டிய செயற்றிட்டங்களை முன்னெடுப்பவர்களை காணமுடியாதுள்ளது.
இதனால் வடக்கில் சமூக சீர்க்கேடுகள் அதிகரித்து வருகின்றன. அதாவது அண்மைக்காலமாக போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் மாத்திரைகள் ஆகியவற்றின் பாவனை அதிகரித்துள்ளது. ஆனால் இவை தொடர்பில் எவரும் கவனம் செலத்துவதாக தெரியவில்லை.
மேலும் வடக்கை எதிர்காலத்தில் சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டிய இளைஞர், யுவதிகள் போதைப்பொருளுக்கு அடிமையாகினால் முழு சமூகமும் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இதனால் சமூக அக்கறைக்கொண்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இத்தனைய சமூக சீர்க்கேடுகளை இணங்கண்டு தடுக்க வேண்டிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்” என விஜேயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.