யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயற்படும் வகையில் அரச உத்தியோகத்தர்களின் சேவை அமைய வேண்டும் என வட. மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் கீழுள்ள பொது நிர்வாக சேவைகள் திணைக்களத்திற்கு உட்பட்ட ஐந்து மாவட்டங்களுக்கான 23 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (சனிக்கிழமை) வழங்கிவைக்கப்பட்டன.
வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் நியமனக் கடிதங்களை வழங்கிய பின்னர், புதிதாக நியமனம் பெற்றவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “யாழ்ப்பாணத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி காணப்படுகின்ற நிலையில், உங்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமையை எண்ணி மகிழ்ச்சியடைய வேண்டும்.
முல்லைத்தீவு, மன்னார் போன்ற தூரப் பிரதேசங்களில் பணியாற்றும் வகையிலேயே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்கு அப்பிரதேசங்களிலேயே பணியாற்ற வேண்டும். எனவே, அதற்கு முன்னர் காரணங்களை கூறிக் கொண்டு இடமாற்றம் கோரி வருவதை தவிர்த்துக் கொள்ளவும்” என்றும் குறிப்பிட்டார்.