இராணுவத்தளபதியின் விமர்சனம் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்: பொ.ஐங்கரநேசன் கண்டனம்

இராணுவத்தளபதி ஒருவர் தமிழ் அரசியற் கட்சிகளை வெளிப்படையாக விமர்சனம் செய்வது ஜனநாயக அரசியலின் குரல்வளையை நெரிக்கும் ஒரு செயலாகும் என வடக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சியின் ஊடகங்களில் வெளியான கருத்துக்கள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அவ்வறிக்கையில், “அரச ஊழியரான இராணுவத்தளபதி அரசியல் பேசுவது இராணுவ ஒழுக்கவிதிகளுக்கும் முரணானது. அந்தவகையில் இராணுவத்தளபதியின் தமிழ்க் கட்சிகளின் மீதான விமர்சனம் அரசியலின் குரல்வளையை நெரிக்கும் ஓர் இராணுவ வன்முறையாகும்.

இராணுவ அதிகாரியான இவர் போருக்குப் பின்னர் தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்து ஆலயங்களைப் புனரமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், இராணுவம் பொதுமக்களுக்கு எவ்வளவுதான் உதவி செய்தாலும் அவர்களால் யுத்தத்தால் கொடூரமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களை வெல்லமுடியாது. வெசாக் கொண்டாட்டத்தை வேடிக்கை பார்க்கவரும் மக்கள் கூட்டத்தைவைத்து இவ்வாறான ஒரு முடிவுக்கு வருவது வேடிக்கையானது.

புதிய அரசியல் அமைப்புக்கான வரைபிலும் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வடக்கு – கிழக்கில் ஆயிரம் விகாரைகளை அமைப்பதற்காக நிதி ஒதுக்குவதாக எவ்வித தயக்கமும் இன்றித் தெரிவித்திருக்கிறது. இவை இன நல்லிணக்கத்துக்கு சவாலான விடயமாகும்” எனத் தெரிவித்தார்.

Related Posts