பௌத்தர்கள் வாழாத பகுதிகளில் விகாரைகள் எதற்கு? : சுமந்திரன்

தமிழ் மக்களின் வாழ்விடங்களில் பௌத்த விகாரைகள் கட்டப்படுவதை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கும் அதேவேளை பௌத்தர்கள் வாழாத பிரதேங்களில் விகாரைகள் எதற்கு அமைக்கப்பட வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்.அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்படுகையில், ‘வடகிழக்கு மாகாணங்களின் நிலமைகள் தொடர்பாக 2011ம் ஆண்டு 2 அறிக்கைகளை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். அதில் இந்த பௌத்த விகாரை அமைப்பு விடயமும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.

அதன் பயனாக பல விகாரைகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனாலும் புதிதாக அமைக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. இந்நிலையில் பௌத்தர்கள் வாழாத பகுதியில் பௌத்த விகாரைகளை அமைப்பதை நிறுத்தவில்லை. எனவே அது தொடர்பாக நடவடிக்கை எடுப்போம்.

மேலும் மகாவலி அதிகாரசபை வடக்கு மக்களுக்கு தண்ணீர் தரட்டும். சிங்கள மக்களை தரவேண்டாம். என நான் நாடாளுமன்றில் கூறியிருக்கின்றேன்.

அண்மையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் இந்நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களுக்கு சென்றிருக்கின்றனர்.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதிலும் தவிர்க்க முடியாத காரணங்களால் அது பிற்போடப்பட்டிருக்கின்றது’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts